Thursday, October 14, 2010

பஞ்சு ஏற்றுமதியை கண்டித்து தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்


சென்னை:"உள்நாட்டுத் தேவைக்கே பஞ்சு கிடைக்காத நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்ததை ரத்து செய்ய வேண்டி, திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:நாட்டிலே உடை தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் 50 லட்சம் பேர் பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழிலை நம்பியுள்ளனர்.பஞ்சை பொறுத்தவரை ஒரு கண்டியின் விலை ஒரே ஆண்டில் 23 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 42 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய் விற்ற நூல், தற்போது 205 ஆக உயர்ந்துள்ளது. இவற்றை மூலப் பொருட்களாக கொண்டு செய்யப்படும் பின்னலாடை மற்றும் ஐவுளித் தொழிலில் உள்ள 70 சதவீதம் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.உற்பத்தியாகும் பஞ்சை அப்படியே ஏற்றுமதி செய்யாமல் அதை நூலாக்கி பின்னர் ஆடையாக்கி மதிப்பை கூட்ட செய்வதிலே அரசு ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் உள்நாட்டுத் தேவைக்கே பஞ்சு கிடைக்காத நிலையில், வெளிநாடுகளுக்கு நவம்பர் 1ம் தேதியில் இருந்து 55 லட்சம் பேல்கள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.

குறிப்பாக உலகச் சந்தையில் இந்தியாவுடன் போட்டியிடும் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலை சீராக நடத்துவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதம் கையிருப்பு வேண்டும். மாதத்திற்கு 22 லட்சம் பேல்கள் என்ற வீதம் டிசம்பர் வரை 55 லட்சம் பேல்கள் கையிருப்பு இருக்க வேண்டும்.அனுமதித்துள்ள ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 22ம் தேதி திருப்பூர் மாநகராட்சிக்கு எதிரில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார். 
thanks-dinamalar

No comments:

Post a Comment