Saturday, October 23, 2010

காங்கிரஸ் போடும் கூட்டணிக் கணக்கு

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் மூழ்கியுள்ள நிலையில் காங்கிரஸும் தன் பங்குக்கு ஒரு பலே கணக்குடன் கமுக்கமாக காத்திருக்கிறது-சமயம் பார்த்து அதை வெளிப்படுத்த.

வழக்கமாக திமுகவும், அதிமுகவும்தான் கூட்டணிகளை நிர்ணயம் செய்யும். அவர்களோடு பிற கட்சிகள் தேர்தலுக்கு தேர்தல் வந்து போகும். இதுதான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது காலம் மாறிப் போயுள்ளதால் இந்த இரு கட்சிகளின் இரும்புப் பிடியும், உடும்புப் பிடியும் தளர்ந்து போய் விட்டது.

கூட்டணிகளுக்கு தலைமை தாங்குவது வேண்டுமானால் இந்தக் கட்சிகளாக இருக்க முடியும். ஆனால் கூட்டணிகள் உருவாவது இவர்களின் கையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ், தேமுதிக, பாமக. இந்த மூன்று கட்சிகளும்தான் இன்றைய தேதியில், வெற்றிக் கூட்டணியை நிர்ணயிக்கும் புதிய சக்திகளாக உருவெடுத்துள்ளன.

அதேசமயம், பாமக இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்பது பழைய கதை. இப்போது இந்த பெருமையில் பங்கு போட வந்து விட்டது தேமுதிக. தேமுதிகவும் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும் கூட்டணி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அது தன் வசம் வைத்திருக்கும் லட்டு போன்ற வாக்கு வங்கி. இவர்களுடன் காங்கிரஸும் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு நிச்சயம் வெற்றி என்பது அரசியல்வாதிகளின் கணக்கு.

விஷயத்திற்கு வருவோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா, பாமக மீண்டும் வருமா என்பது சமீப காலமாக பேசப்பட்டு வரும் முக்கிய விஷயமாக உள்ளது. அதேபோல தேமுதிக கூட்டணிக்கு வருமா, பாமக மீண்டும் வருமா, கூடவே காங்கிரஸும் வருமா என்ற எதிர்பார்ப்பில் அதிமுக ஆதரவாளர்களும், அனுதாபிகளும் காத்துள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் தனிக் கணக்கோடு படு கமுக்கமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த அரசியல் விளையாட்டை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

விஷயம் வெகு சிம்பிள். திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம். நமது தலைமையில் தனிக் கூட்டணி அமைப்பது. அதில், பாமகவையும், தேமுதிகவையும் இணைத்துக் கொள்வது. இந்தக் கூட்டணிக்கு நிச்சயம் கணிசமான இடங்கள் கிடைக்கும். தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சிக்கு (திமுக அல்லது அதிமுக) அதிக இடங்கள் கிடைக்கிறதோ அந்தக் கட்சியுடன் இணைந்து (பாமக-தேமுதிக வராவிட்டால் தனியாக போய்) ஆட்சியமைப்பது. இதுதான் காங்கிரஸின் திட்டம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இது உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்று சமீபத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு முக்கியத் தலைவர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸை தொடர்பு கொண்டு பேசினாராம். அவர், திமுகவுடன் சேரும் முடிவை தாமதப்படுத்துங்கள். அவசரம் காட்ட வேண்டாம். சிறப்பான கூட்டணிக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். அதுவரை பொறுத்திருங்கள் என்று தெரிவித்தாராம் அந்தத் தலைவர்.

இதேபோன்ற ஒரு வாக்குறுதி தேமுதிக தலைமைக்கும் போய்ச் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணிக் கணக்கை காங்கிரஸ் போடக் காரணம், ராகுல் காந்தி என்கிறார்கள். அதேசமயம், சோனியா காந்தியின் விருப்பத்திற்கு மாறாகவும் ராகுல் காந்தி நடக்கவில்லையாம். அதாவது ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடிக்க காத்திருக்கிறார் ராகுல். 

ராகுலின் உத்தி என்னவென்றால், யாருடனும் சேராமல் தனிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். இது நமது பலத்தை அறிய உதவும். தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் பங்கோடு கூட்டணி அமைக்கும் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சோனியாவை சமாதானப்படுத்தி விட்டாராம் ராகுல்.

இந்த தனிக் கூட்டணியால் காங்கிரஸுக்கு என்ன பலன் கிடைக்கும்? 

தமிழகத்தில் காங்கிரஸின் உண்மையான பலத்தை அறிய முடியும். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எப்படிப்பட்ட முடிவுகள் கிடைக்கும் என்பதை அறியலாம். எதிர்கால அரசியலில் காங்கிரஸ் கட்சி முக்கியக் கட்சியாக, பலமான கட்சியாக உருவெடுக்க இது அடித்தளமாக அமையும். இறுதியில் தனித்து ஆட்சியைப் பிடிக்கக் கூடிய நிலையை அடைய இந்த புதிய கூட்டணி ஒரு பிள்ளையார் சுழியாக அமையும் என்பதே ராகுலின் திட்டமாம்.

அதேசமயம், திமுக, அதிமுகவை தவிர்த்து விட்டு பாமக, தேமுதிகவுடன் இணைந்து தனித்துப் போட்டியிடுவதால் காங்கிரஸுக்குப் பெரும் பாதகம் ஏதும் வந்து விடப் போவதில்லை. தேசிய அரசியலில் கடைப்பிடிக்கப்படும் உத்தியை இங்கு புகுத்துகிறார் ராகுல். அதாவது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியும், இன்ன பிற மதச்சார்பற்ற கட்சிகளும் தனித் தனியாக போட்டியிடுவது வழக்கம். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கிச் சாப்பிடுவது வழக்கம். அதே பாணியை இப்போது தமிழக அரசியலுக்குள் கொண்டு வரப் பார்க்கிறார் ராகுல்.

இந்தப் புதிய கூட்டணி குறித்த விஷயங்களை படு ரகசியமாக வைத்துள்ளது காங்கிரஸ். பீகாரில் நடக்கும் தேர்தலுக்காக இந்த அமைதியாம். பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பில்லை. ஆனால் லாலு கூட்டணியை முந்தி 2வது இடத்தைப் பிடித்தாலே அது மிகப் பெரிய வெற்றி என்ற நிலையில்தான் காங்கிரஸ் உள்ளது.

அப்படி நடந்து பீகாரில் நம்பர் டூ கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தால், தமிழகத்தில் தனிக் கூட்டணி என்ற ரிஸ்க்கை எடுக்கும் முடிவை காங்கிரஸ் பகிரங்கமாக அறிவிக்கும் என்கிறார்கள். தற்போது பீகாரில் காங்கிரஸ் கட்சியை மைக்ராஸ்கோப்பை வைத்து தேட வேண்டிய நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் (ராகுல்) போட்டுள்ள இந்த புதிய கணக்கு தமிழகத்தில் எப்படி வரவேற்கப்படும், தமிழக வாக்காளர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக மாறுவார்களா அல்லது வழக்கம் போல ஏதாவது ஒரு 'மு.க'வை (திமுக அல்லது அதிமுக) தனிப் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுப்பார்களா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும். thanks thatstamil.com

No comments:

Post a Comment