Monday, October 25, 2010

குறை சொன்னால் திமுக அரசுக்கு வலிக்கிறது, கோபம் வருகிறது-இளங்கோவன்

தமிழகத்தில் புதிய அரச பாரம்பரியத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தவறு என்று நாங்கள் கூறினால் கோபம் வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மத்திய அரசின் திட்டம் என்று சொன்னால் வலிக்கிறது என்கிறார்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், காங்கிரஸ் முப்பெரும் விழா நேற்று இரவு நடந்தது. இதில் இளங்கோவன் பேசினார். 

அவர் பேசுகையில், 

1967-ம் ஆண்டு வரை காமராஜர் ஆட்சியில் முதல்வர் என்றால் நல்லது செய்வார் என்று இருந்தது. அவருக்குப் பிறகு அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றவர்களும் நல்லது செய்துள்ளனர். தமிழக முதல்வரும் நல்லது செய்து வருகிறார்.

ஆனால் அதில் முக்கியப் பங்கு வகிப்பது மத்திய அரசு. இதைச் சொல்ல மறுக்கிறார்கள். ஒரு கிலோ அரிசி 1-க்கு வழங்கும் திட்டம் சிறந்த திட்டம். ஆனால் இத்திட்டத்துக்கு ஒரு கிலோவுக்கு ரூ.6.50 மத்திய அரசு வழங்குவதை மறைத்து விடுகின்றனர்.

இதுபோன்ற பல்வேறு சிறந்த திட்டங்கள் சாத்தியமாவதற்கு சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும்தான் காரணம். மருத்துவ வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் சேவைகூட மத்திய அரசின் திட்டம்தான். இதை ஏன் வெளியில் சொல்வதில்லை? இதையெல்லாம் நாங்கள் சொன்னால் வலிக்கிறது என்கிறார்கள்.

தமிழகத்தில் புதிய அரச பாரம்பரியத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தவறு என்று நாங்கள் கூறினால் கோபம் வருகிறது.

ராஜீவ் காந்தி பெயரை மருத்துவமனைக்கு வைக்குமாறு கோரினால் இக்கட்டில் சிக்க வைக்க, பெரியார் பெயரை வைக்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை வைத்து அறிக்கை விடுகிறார். அவருக்கு இப்போதாவது பெரியார் ஞாபகம் வந்தது என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

ஈரோடு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. அதேபோல பெரியார் சிகிச்சை பெற்ற ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அவரது பெயரை சூட்ட வேண்டும்.

நாட்டுக்காக தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் சிலைக்கு செருப்பு மாலை போட்டுள்ளனர். இதனை காங்கிரஸாரும், பொதுமக்களும் எப்படி தாங்கிக் கொள்வார்கள்?.

ராஜீவ் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக குடும்பத்தினர் ஆவார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களைப் பார்த்தால் தேர்தல் நேரத்தில் மெளனப் புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வீரபாண்டியார்:

கடந்த 45 ஆண்டுகளாக காங்கிரஸ் பதவியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ்காரர்கள் சுயமரியாதையை இழக்கவில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

சேலம் அருகே ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் அவரை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சந்தித்துப் பேசியுள்ளார். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செயல்பாடுகள் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக உள்ளது.

அரசாங்க கொடியுடன் காரில் சென்று குற்றாவாளியை அமைச்சர் பார்க்கிறார் என்றால், எப்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார் இளங்கோவன்
thanks thatstamil.com

No comments:

Post a Comment