Friday, October 29, 2010

இந்திரா மீது கல் எறிந்தவர்கள் பதில் கூறும் காலம்: இளங்கோவன்


  



ஈரோடு : ""இந்திரா மீது கல் எறிந்தவர்கள் பதில் கூறும் காலம் வந்துவிட்டது,'' என, ஈரோட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.
இளைஞர் காங்கிரசாரின் நடைபயணம் நேற்று ஈரோடு வந்தடைந்தது.  இதையொட்டி, ஈரோட்டில் நேற்றிரவு காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:மற்ற கட்சியைப் போல் காங்கிரஸ் கட்சியில் பிரியாணி, குவார்ட்டர் கொடுப்பதில்லை. பீகாரில் லாலு பேசுவது போல் தமிழகத்தில் சிலர் பேசுகின்றனர். சோனியா குடும்பத்துக்காக வாழாமல் நாட்டுக்காக வாழ்கிறார். ராகுல் உத்தமத் தலைவர்.சோனியா நினைத்திருந்தால் பிரதமராகி இருக்க முடியும்; தன் மகளை டில்லிக்கு முதல்வராக்கி இருக்க முடியும்; தன் மருமகனை மகாராஷ்டிரா கவர்னராக்கி இருக்க முடியும். ஆனால், சோனியா அதை விரும்பவில்லை.ஆங்கிலம், இந்தி தெரியாதவர்கள் எல்லாம் இப்போது பார்லிமென்டுக்கு செல்கின்றனர். ராஜராஜ சோழன் இருந்த போது கூட அதிகபட்சம் 150 நடனக் கலைஞர்களை வைத்து தான் ஆட வைத்திருப்பார். ஆனால், ஆயிரக்கணக்கான கலைஞர்களை ஆட வைத்து, பட்டாடை உடுத்தி ரசிக்கின்றனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா, தமிழகம் வந்தபோது கல் எறிந்தனர்; அவர் நெற்றியில் வழிந்த ரத்தத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும். விதவையர்க்கு தமிழகத்தில் கொடுக்கும் சேலையை, இந்திராவுக்கு கொடுக்க வேண்டும் என்று இழிவுபடுத்தி பேசினர். அவர்கள் பதில் கூறும் காலம் இப்போது வந்து விட்டது.மற்றவர்களைப் போல் ராஜ தந்திரம், அரசியல் சூழ்ச்சி, கூட இருப்பவர்களை முடக்கி வைத்துவிட்டு, தன் குடும்பத்தை ஆட்சியில் அமர்த்தும் எண்ணம் நம்மிடம் இல்லை. இதை இளங்கோவன் பேசினால் கோபம் வருகிறது; வாசன் பேசினால் முகம் சுளிக்கின்றனர்.காங்கிரஸ் கட்சி 234 தொகுதியிலும் போட்டியிட வேண்டும். இதில், 134 தொகுதியில் இளைஞர் காங்கிரசார் போட்டியிட வேண்டும். எங்களைப் போன்ற மூத்தவர்களுக்கு 100 தொகுதி ஒதுக்க வேண்டும்.இளைஞர் காங்கிரசார் நடைபயணம் சென்னையில் முடியும் போது, சில மாற்றங்கள் தமிழகத்தில் நிகழும். நான் எதிர்பார்க்கும் விஷயங்கள் நம் இயக்கத்திலும் நடக்கும். காமராஜர் ஆட்சியை உங்களால் தான் தர முடியும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

மத்திய அமைச்சர் வாசன் பேசியதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்; காங்கிரஸ் இயக்கத்தை பலப்படுத்துங்கள் என்று ராகுல் கட்டளையிட்டார். அதை ஏற்று மிகச் சிறப்பாக லட்சியத்துடன் நடக்கிறீர்கள். மொத்தம் 1,180 கி.மீ., தூரம், 27 எம்.பி., தொகுதிகள், 112 சட்டசபை தொகுதி வழியாக நடைபயணம் நடக்கிறது. லட்சக்கணக்கான மக்களை சந்திக்கிறீர்கள். சரித்திரம் படைக்கப்போகும் நடைபயணம் இது. காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இது அமையும்.பொறுத்தார் பூமியாள்வார் என்று கூறுவர்.

நம் லட்சியத்தை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கேற்ப இளைஞர் காங்கிரஸ் பணி அமையும்.நம் கட்சிக்கு களங்கம் ஏற்படும் செயல்கள் நடக்கின்றன. ராஜிவ் சிலைக்கு அவமதிக்கும் செயல் நடந்தது. வரும் காலத்தில் இதுபோன்ற செயல் நடக்குமானால், காங்கிரஸ் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அத்தகைய சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.ராகுல் வழிகாட்டுதலுடன், காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற லட்சியத்தோடு நடைபயணம் நடக்கிறது. அந்த லட்சியத்தை அடைய வேண்டுமானால், உறுதியோடு, ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்.இவ்வாறு வாசன் பேசினார்.
thanks dinamalar

No comments:

Post a Comment