Tuesday, November 16, 2010

தணிக்கை குழு அறிக்கை தாக்கல்; ஸ்பெக்ட்ரம் விவகாரம் விதி முறை மீறல்;இன்றும் பார்லி.,யில் அமளி


ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் தணிக்கை குழு அறிக்கை லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பிரதமர் மற்றும் சட்ட அமைச்சக ஆலோசனைகளை தொலை தொடர்புதுறை அமைச்சர் ராஜா பின்பற்றவில்லையென்று குறை கூறியுள்ளது. இதில் தகுதி இல்லாத லைசென்ஸ்தாரர்களுக்கு உரிமம் வழஙகப்பட்டுள்ளதாகவும் , டெலிகம் கமிஷனிடம் இது தொடர்பாக ஆலோசிக்கவில்லை என்றும்
, இதன் காரணமாக மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2008 ல் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் காரணமாக மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 645 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த தணிக்கை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்கட்சிகளுக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாகவும், ராஜா மீதான நடவடிக்கைகள் பலமாக இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளளனர்.


மேலும் எவ்வித சமரசத்தையும் ஏற்க எதிர்க்கட்சிகள், தயாராகஇல்லை. இந்த விவகாரம் குறித்து பார்லி., கூட்டு கமிட்டி விசாரணைக்கு உத்தரவிடும் வரை ஓய மாட்டோம் என இன்றும் ( செவ்வாய்க்கிழமை ) பார்லி.,யில் அமளி துமளி நிலவியது.


இதனையடுத்து மதியம் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவை கூடியதும், மீண்டும் அமளி ஏற்பட்டது. லோக்சபாவில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான தணிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. உறுப்பினர்கள் வி வாண்ட் ஜஸ்டிஸ் என கோஷமிட்டனர். இது போல் ராஜ்யசபாவிலும் அமளி நிலவியதை அடுத்து மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.


மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், அதை சமாளிக்கும் வகையில், மத்திய அரசு அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் குறித்த, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கையை, பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.


"2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரத்தில், மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா மீது, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் குற்றம் சாட்டியது.இப்பிரச்னையை முன்வைத்து, எதிர்க்கட்சிகள், கடந்த வாரம், பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.


பார்லிமென்ட் கூட்டத் தொடர் மீண்டும் துவங்கும்போது, எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையில் புயலை கிளப்பும் என, தகவல்கள் வெளியாயின.காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, ராஜா நேற்று முன்தினம் இரவு, தன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பார்லிமென்ட் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ராஜாவின் ராஜினாமாவுடன் எதிர்க்கட்சிகள் திருப்தி அடையவில்லை.


கடும் அமளி: லோக்சபா நேற்று துவங்கியதும், பா.ஜ., - அ.தி.மு.க., - சமாஜ்வாடி மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் எழுந்து, "ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.இதற்கு அனுமதி அளிக்காத சபாநாயகர் மீரா குமார், கேள்வி நேரத்தை துவங்க உத்தரவிட்டார். ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்ததால், சபை, மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்பு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபா துவங்கியதுமே ஏற்பட்ட அமளியால், ஒத்திவைக்கப்பட்டது.


கூட்டுக் குழு விசாரணை இல்லை: இப்பிரச்னை குறித்து செய்தியாளர்களிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. இதுகுறித்து பிரதமர் சபையில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பதவியில் இருந்து விலகிய ராஜா விரும்பினால், தன் நிலையை விளக்கி அறிக்கை தாக்கல் செய்யலாம்.பா.ஜ., ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தது. அவர்களது ஆட்சிக் காலத்தில், எத்தனை பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டனர்? தெகல்கா பிரச்னையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலகியபோது, அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் விளக்கம் அளித்தரா? மத்திய ஆடிட்டர் ஜெனரல் தாக்கல் செய்த அறிக்கையை, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு ஆய்வு செய்யும். அதில் கட்சிகள் விவாதிக்கலாம்இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.


மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், "ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என, கேட்பது அர்த்தமற்றது. மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கை, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது' என்றார்.


அடக்கி வாசிப்பு: இதற்கிடையே, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், கூட்டணி அரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அணுகுமுறையை மேற்கொள்ள அரசு விரும்புகிறது. அதேசமயம், காமன்வெல்த், ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம், அதற்கு அடுத்து "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் என வந்திருப்பதால், சமாளிக்கத் துவங்கியுள்ளது. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் குறித்து, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அளித்த அறிக்கையை, பார்லிமென்டில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


பார்லிமென்ட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு வசதியாக, இன்று டில்லியில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதே சமயம், புதிய தகவல் தொடர்பு அமைச்சராக கபில்சிபல் நியமனமும், எதிர்க்கட்சிகள் தாக்குதலை சமாளிக்க எடுத்த முயற்சியாகும் என்று கூறப்படுகிறது. (dinamalar)

No comments:

Post a Comment