Friday, September 28, 2012

மின் தடையால் மயானங்களில் சடலங்கள் காத்திருப்பு: இறந்த பிறகும் தொடரும் அவஸ்தை


:உயிரற்றவர்களுக்கும், மின் தடையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில், மாநகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமாக, 12 மின் மயானங்கள் உள்ளன. மின் தடையால், மின் மயானங்களில், சடலங்கள் எரியூட்டும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சொக்கம்புதூரில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில், மின் தடையால், 125 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் பழுதாகி விட்டது. இதனால், சடலம் எரியும்போது மின்வெட்டு ஏற்பட்டால், துர்நாற்றப் புகை வெளியேறுகிறது; இப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் தவியாய் தவிக்கின்றனர்.சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது, மின் தடை ஏற்பட்டால், பல மணி நேரத்துக்குப் பின், மீண்டும் மின்சாரம் வரும் வரை, காத்திருக்க வேண்டியுள்ளது. பாதியில் விட்டுச் செல்லவோ, மயானத்தில் காத்திருக்கவோ முடியாமல் உறவினர்கள் தவிப்பது, பரிதாபகரமானது.

சொக்கம்புதூர் மாநகராட்சி மின் மயான காப்பாளர் ஜெகன்னாதன் கூறியதாவது:இங்கு, வாரம், 25 சடலங்கள் வருகின்றன. எரியூட்டும் கல்லின் உட்பகுதியில் மின்சார காயில் இருப்பதால், ஒருமுறை எரித்தாலும் அதன் வெப்பம் 24 மணி நேரத்துக்கு கல்லில் இருக்கும்.எனினும், சடலம் எரிந்து கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டால், புகை வெளியேறுவதை தவிர்க்க முடியாது. மின்சாரம் எப்போது வரும், போகும் என்பது தெரியாத நிலையில், இப்பிரச்னை குறித்து உறவினர்களிடம் முன்பே கூறி விடுகிறோம். மின் தடையால் பணிகள் தாமதமாகி, சடலங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

பாப்பநாயக்கன்பாளையம் தனியார் மின் மயான ஊழியர் உண்ணி கூறுகையில், ""இங்கு தினமும், குறைந்தது, 5-6 சடலங்கள் வருகின்றன. இரண்டு மின்தளங்கள் உள்ளன. ஜெனரேட்டர் வசதி இருப்பதால் பிரச்னை இல்லை,'' என்றார்.

தகனம் தடைபடுவது உணர்வுரீதியான விஷயம் என்பதால், மின் மயானங்களில் பழுதாக உள்ள ஜெனரேட்டர்களை சரி செய்ய வேண்டும்; ஜெனரேட்டர் இல்லாத இடங்களுக்கு, அந்த வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே, பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment