Tuesday, November 16, 2010

அரசியல் மாற்றங்களுக்குத் தயாராகிறது திமுக!




 மத்திய அமைச்சர் பதவியை ஆ. ராசா ராஜிநாமா செய்திருப்பதைத் தொடர்ந்து கூட்டணியில் எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள திமுக தயாராகி வருவதாகத் தெரிகிறது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால், அவர் பதவி விலக வேண்டியதில்லை என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி சனிக்கிழமை மாலை வரையில் கூறி வந்தார்.
பிரதமரின் சார்பில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல்வரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஆ. ராசா, டி.ஆர். பாலுவுடன் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். பிறகு, நாடாளுமன்றம் சுமுகமாக நடக்க உதவும் வகையில் ராசாவைப் பதவிவிலகக் கோருவதென்ற அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்டார்.
கடந்த 2 ஆண்டுகளாகவே அலைக்கற்றை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பிவந்தபோதிலும், நாடாளுமன்றத்திலும் இதுபற்றி அமளி ஏற்பட்டபோதிலும் ராசா மீது தவறு ஏதும் இல்லை என்றுதான் திமுக தலைமை கூறி வந்தது.
மகாராஷ்டிரத்தில் ஆதர்ஷ் குடியிருப்பு வீடு ஒதுக்கீடு புகாரில் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவாண் பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது. காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் முறைகேடு புகார் காரணமாக, சுரேஷ் கல்மாடி நாடாளுமன்ற காங்கிரஸ் செயலாளர் பொறுப்பில் இருந்து விலக நேர்ந்தது.
எனவே புகாருக்கு ஆளாகியிருக்கும் திமுக அமைச்சர் ராசாவும் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுக தரப்பில் யாரும் இதற்கு அசைந்து கொடுக்கவில்லை.
ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைமை தந்த நெருக்கடி காரணமாகவே ராசாவைப் பதவி விலகச் செய்வது என திமுக தலைமை முடிவு செய்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இப்போதைக்கு தொலைத் தொடர்புத்துறையின் பொறுப்பை பிரதமரே கூடுதலாகக் கவனிப்பார் என்றும், சில மாதங்கள் கழித்து மீண்டும் ராசாவுக்கே அதை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ராஜிநாமா செய்த மறுநாளே அந்தத் துறையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் ஒப்படைத்திருப்பது திமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
மேலும் ராசாவுக்குப் பதிலாக, வேறொரு திமுக எம்.பி.க்கு முக்கியமான ஓர் இலாகாவை தந்து அமைச்சராக்க வேண்டும் என்று திமுக கேட்டதாகவும், திமுக தரப்பில் கேட்கப்பட்ட முக்கிய இலாகாக்கள் எதையும் இப்போது தருவது சாத்தியமில்லை என காங்கிரஸ் கைவிரித்துவிட்டதாகவும் தில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் நிறைய தொகுதிகளைக் கேட்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸில் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் அவர்கள் கட்சி மேலிடத்தை வற்புறுத்தி வருகின்றனர்.
கூட்டணி என்றால் அது திமுகவுடன்தான் என்பதில் சோனியா உறுதியாக உள்ளார் என்றும், கூட்டணி இல்லாவிட்டால் காங்கிரஸ் தலைமையில் ஓர் அணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் கட்சித் தலைமைக்கு உள்ளது என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.
கருணாநிதிக்கு மிகுந்த பாசத்துக்குரியவராகக் கருதப்படும் ராசாவைப் பதவி விலகும் கட்டாய சூழ்நிலைக்கு காங்கிரஸ் தள்ளியதால், கூட்டணியில் இருந்து வெளியேறவும் ஆயத்தமாகிறதோ என்ற எண்ணம் திமுக தலைமையிடம் எழுந்துள்ளது.
ராசாவை அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் நீக்கினால், கூட்டணி முறிவதற்கு அதுவே காரணமாக இருக்கும் என்றும் பேசப்பட்டது. இப்போது நெருக்குதல் தந்து ராசா பதவிவிலக நேரிட்டுள்ளது. எனவே கூட்டணியில் இருந்து திமுக தானாகவே வெளியேறலாம் அல்லது வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என்று கூறிவிட்டு திமுக அமைச்சர்களை ராஜிநாமா செய்யுமாறு கூறலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முரசொலி மாறன் இருந்தவரையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, அவர் மறைவதுவரை காத்திருந்து, சோனியா தொலைபேசியில் அழைப்பு விடுத்தார் என்று காரணம் காட்டி, காங்கிரஸ் கூட்டணிக்கு மாறியதை சுட்டிக்காட்டி, திமுக எந்த நேரத்திலும் எதையும் செய்யத் தயங்காது என்று சில காங்கிரஸ் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அப்படி காங்கிரஸ் கட்சி வெளியேறினால் திமுக அணிக்கு பலம் சேர்க்க பிற கட்சிகளின் உதவி தேவைப்படும். தமிழக அரசியல் சூழ்நிலையில் ஏதாவது மாற்றம் வர வேண்டும் என்றுதான் பா.ம.க. எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
இப்போது திமுக தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு மட்டுமன்றி, இடதுசாரி கட்சிகளுக்கும் கூட மறைமுகமாக அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் தோல்வி அடைந்தபோது, திமுக அரசு செயல்படுத்திய நல்ல திட்டங்களால் கிடைத்த நற்பெயரின் பலன்களை தாங்கள் பெற முடியாமல் போய்விட்டதும் இதற்குக் காரணம் என இடதுசாரிகள் குறிப்பிட்டனர்.
இப்போது காங்கிரஸ் இல்லாத நிலையில் இடதுசாரிகள் திமுக அணியில் சேருவதில் பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புக்கு, மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எனவே இடதுசாரிகள் ஆதரவை திமுக பெறுவது எளிது.
பா.ம.க.வைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலில் தந்த அளவுக்கு தொகுதிகளைக் கொடுத்தாலே, திமுக கூட்டணியில் சேர்ந்துவிடும் என்று திமுக வட்டாரம் நம்புவதாகத் தெரிகிறது.
இவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்தாலும், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி திருமணம் மதுரையில் வியாழக்கிழமை (நவம்பர் 18) நடக்கிறது. கட்சித் தலைவர்கள் அங்கே செல்வார்கள். எனவே அதுவரையில் திமுக அமைதி காக்கும் என்று தெரிகிறது.
அதன் பிறகு தில்லி கூட்டணியில் மாறுதல் வரலாம்; அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் அணி மாற்றம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது(dinamani)

No comments:

Post a Comment