Tuesday, November 16, 2010

மிகப் பெரிய பித்தலாட்டக்காரர்: ஜெயலலிதா பற்றி கருணாநிதி ஆவேசம்



 ""தமிழகம், மிகப்பெரிய பித்தலாட்டக்காரரை எதிர்க்கட்சித் தலைவராக பெற்றுள்ளது,'' என்று ஜெயலலிதாவை, முதல்வர் கருணாநிதி கடுமையாக சாடியுள்ளார்.


அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: 
ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,"பிரதமர் அலுவலகம், தணிக்கைத் துறை, சுப்ரீம் கோர்ட் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை மத்திய அமைச்சராக இருந்த ராஜா கேலிக் கூத்தாக்கி விட்டார்' என தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு, வருமான வரி வழக்கில் ஜெயலலிதாவைப் பற்றி,"நீதிமன்ற நடவடிக்கைகளை நீங்கள் கேலிக் கூத்தாக்கி கொண்டிருக்கிறீர்கள். இந்த நடவடிக்கைகளை எவ்வளவு காலத்திற்கு இழுத்தடிப்பீர்கள்?' என கேள்வி கேட்டதை மறந்து விடலாமா?ஜெயலலிதாவும் மற்ற எதிர்க்கட்சிகளும், அலைவரிசை ஒதுக்கீடு குறித்து, ராஜா மீது கூறுகின்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, தணிக்கைத்துறை அதிகாரியின் அறிக்கையை எடுத்து வைக்கின்றனர். தணிக்கைத் துறை அறிக்கை, பார்லிமென்டில் வைக்கப்படுவதற்கு முன்பே, அறிக்கையின் நகல், அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு விட்டது.அந்த அறிக்கையில், "அலைவரிசையின் மதிப்பைக் கணக்கிட்டு, அதனால் ஏதாவது இழப்பு என்பதெல்லாம் அனுமானத்தின் அடிப்படையில் சொல்லப்படுவதாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமானத்தில் கூறப்படும் கருத்தின் அடிப்படையில், இறுதித் தீர்ப்பை எழுத முற்படுவது முறைதானா?


அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும், தணிக்கை அதிகாரிகளின் அறிக்கைகள் தரப்பட்டு, சட்டசபையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தலைமை கணக்காயர் தீத்தன் நிருபர்களிடம் கூறும்போது, "முறையாக வரிகள் விதிக்காததாலும், வீணான செலவுகளின் காரணமாகவும் 2002 - 03ல் 2,902 கோடி ரூபாய், 2001 - 02ல் 3,930 கோடி ரூபாய், 2000 - 01ம் ஆண்டில் 2,621 கோடி ரூபாய், 1999 - 2000ம் ஆண்டில் 1,901 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.இந்த செய்திகளைப் பார்த்ததும், "தணிக்கைத் துறை அறிக்கையே வெளியிட்டுவிட்டது. இதோ நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். ராஜினாமா செய்தால் மட்டும் போதாது; என்னை நானே கைது செய்து கொள்கிறேன். என் மீது வழக்கு தொடர வேண்டும்' என்றெல்லாம் ஜெயலலிதா கூறினாரா? "தணிக்கை அதிகாரி, நிருபர்களிடம் கூறியது அதிர்ச்சியாக உள்ளது.


சுதந்திர இந்திய வரலாற்றில், இதுபோன்று எப்போதும் நடந்ததில்லை. அரசியல் சாசனத்திற்கு முரணானது' என்றெல்லாம் ஒரு பக்க அறிக்கையை வெளியிட்டார். அத்துடன், அது விளம்பரமாகவும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.தணிக்கைத் துறை அதிகாரி குற்றம் சாட்டியபோது, இப்படியெல்லாம் வியாக்யானம் செய்தவர், தற்போது எப்படியெல்லாம் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டு,  தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கையே முடிவானது என்றும், அதையேற்று ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும், வழக்கு போட வேண்டும் என்றும் கூறுவதன் மூலம் அவரின் நோக்கத்தை தெரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


ஊழல் பேர்வழி யார்?கருணாநிதி அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:"ஊழலே என்னுடைய வாழ்க்கை முறை' என்று ஜெயலலிதா கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து தன் பெயருக்கு வந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, வங்கியின் தன் பெயரில் வரவு வைத்துவிட்டு, "யார் அனுப்பியது என்றே தெரியவில்லை எனக் கூறிய ஜெயலலிதா ஊழல் பேர்வழியா? இல்லை, நானா?ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன் (1991),  அவரின் சொத்து மதிப்பு 2 கோடியே 2 லட்ச ரூபாய். முதல்வராக ஐந்து ஆண்டுகள் பொறுப்பு வகித்தபின் (1996), அவரின் சொத்து மதிப்பு 66 கோடியே 45 லட்ச ரூபாய்வருமானத்திற்கு மீறி 64 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பெங்களூரு கோர்ட்டில் இன்றும் வழக்கு நடந்து கொண்டிருப்பது என் மீதா? அவர் மீதா? எல்லாவற்றையும் மறந்துவிட்டு, நான் ஊழலை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ளேன் என்று கூறுகிறார் என்றால், எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரரை, தமிழகம் எதிர்க்கட்சித் தலைவராக பெற்றுள்ளது, என்பதை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.(dinamalar) 

No comments:

Post a Comment