Wednesday, November 24, 2010

அ.தி.மு.க., உறவு குறித்து விஜயகாந்த் ஆலோசனை



அ.தி.மு.க., ஆதரவு நிலை குறித்து கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், கடந்த சில நாட்களுக்கு முன், தே.மு.தி.க., தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது,
நாளை நடக்கவுள்ள போக்குவரத்து தொழிற்சங்க தேர்தலில், அ.தி.மு.க., தொழிற்சங்கத்துக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று, திடீர் முடிவு எடுக்கப்பட்டது.தே.மு.தி.க., தொழிற்சங்க தலைவர் வாயிலாக, இது தொடர்பான அறிவிப்பு முறைப்படி வெளியானது. அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையிலான புதிய உறவு, அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.தே.மு.தி.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்திற்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசரமாக வரவழைக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்க காலை 11.30 மணிக்கு தே.மு. தி.க., தலைவர் விஜயகாந்த் வந்தார். பகல் 2.30 மணி வரை மூன்று மணி நேரம் நடந்தது.அப்போது வெளியாட்கள், கட்சி அலுவலகத்தில் நுழைய முடியாதவாறு நுழைவாயில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ரகசியமாக நடந்த இக்கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.அ.தி.மு.க., போக்குவரத்து தொழிற்சங்கத்துக்கு தே.மு.தி.க., ஆதரவு அளித்தது குறித்து, கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கருத்து கேட்டார். அதற்கு நிர்வாகிகள், "கட்சித் தலைமை எடுத்த முடிவு சரிதான்' என தெரிவித்தனர்.

அதன் பின் விஜயகாந்த் பேசியதாவது: தி.மு.க., அடுத்த முறை ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் செய்வேன். ஆறு மாதத்திற்குள் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நமது கட்சி மாநாடு ஜனவரியில் சேலத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு கூட்டம் சேர்க்கும் பணிகளில் மட்டும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும். இம்மாநாட்டில், நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு, 25 லட்சம் பேரை திரட்ட வேண்டும்.அ.தி.மு.க., நடத்திய பொதுக் கூட்டங்களில் ஆண்களே அதிகளவில் பங்கேற்றனர். ஆனால், தே.மு.தி.க., நடத்தும் மாநாட்டில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.இம்மாநாடு தான், சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.,விற்கு சாதகமான பல்வேறு திருப்பு முனைகளை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையும்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

"டாக்டர்' விஜயகாந்த்: சமூக சேவை ஆற்றியதற்காக, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, "இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.,) என்ற பல்கலைக்கழகம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வரும் டிச., 3ம் தேதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்ட பணிகளில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர். (dinamalar) 

No comments:

Post a Comment