Friday, November 19, 2010

கர்நாடக அரசியல் பரபரப்பு: எடியூரப்பா பதவி பறிக்கப்படுமா?


Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update






நில ஊழல் புகாரில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பதவி பறிக்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. டெல்லியில் அத்வானி தலைமையில் பா.ஜ. மேலிட தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படாததால்,
இந்த விவகாரம் குறித்து இரண்டொரு தினங்களில் மீண்டும் கூடிப் பேசுவது என்ற முடிவுடன் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

கர்நாடகாவில் தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் இருந்த நிலங்களை முதல்வர் எடியூரப்பாவின் மகன்கள், மகள் மற்றும் மருமகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கும், அமைச்சர்கள் கட்டா சுப்பிரமணியம், முருகேஷ், ஷோபா ஆகியோருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார். இதுகுறித்து லோகயுக்தா அமைப்பிடம் 580 பக்கங்கள் அடங்கிய புகாரை குமாரசாமி அளித்தார்.

ஊழல் விசாரணையை எதிர்கொள்ள முதல்வர் எடியூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்தப் பிரச்னையை குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா மக்களவையில் நேற்று எழுப்ப முயன்றார். இந்தப் பிரச்னை குறித்து எடியூரப்பா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டப்படியே நில ஒதுக்கீடுகள் நடந்துள்ளது. நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கட்சியில் உள்ள சிலரும் எனது ஆட்சியை விரும்பவில்லை. இது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளேன்’’ என்றார்.

இதற்கிடையே எடியூரப்பா மீதான குற்றச்சாட்டு குறித்து டெல்லியில் பா.ஜ. மேலிடத் தலைவர்கள் நேற்று மாலை கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, பா.ஜ. பொதுச்செயலாளர் அனந்த்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 

ஸ்பெக்ட்ரம் பிரச்னை, ஆதர்ஷ் மற்றும் காமன்வெல்த் ஊழலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நேரத்தில் கர்நாடக பிரச்னை பா.ஜ.வுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இந்த விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்காவிட்டால் அது மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்திவிடும் எனவும் சுஷ்மா சுவராஜ் மற்றும் அனந்த்குமார் ஆகியோர் தெரிவித்தனர். இதனால் எடியூரப்பா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

எடியூரப்பா மீது நடவடிக்கை எடுத்தால் அது லிங்காயத் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும், கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பா.ஜவின் செல்வாக்கு பெருகியதில் லிங்காயத் சமூகத்தினரின் ஆதரவு பெரும்பங்கு வகித்திருப்பதையும் அத்வானி, அருண்ஜெட்லி ஆகிய தலைவர்கள் சுட்டிக் காட்டினர். இதனால் எடியூரப்பா பதவி நீக்க விவகாரம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

எடியூரப்பாவை டெல்லி அழைத்து பேசுவது என்றும் இரண்டொரு தினங்களில் மீண்டும் கூடி விவாதிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையில் எடியூரப்பாவுக்கு எதிராக 61 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று டெல்லி செல்வதாக இருந்த முதல்வர் எடியூரப்பா தனது பயணத்தை ரத்து செய்தார்.(dinakaran)

No comments:

Post a Comment