Friday, November 12, 2010

அ.தி.மு.க., ஆதரவை காங்கிரஸ் பெறுமா? மன்மோகன் சிங் பதில்

 ""மத்திய அரசுக்கு ஆதரவளிப்பதாக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியது தொடர்பாக, காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

"2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட அமைச்சர் ராஜா காரணமாக இருந்துள்ளார்; இதற்கான முழு பொறுப்பும் அவருக்கு உள்ளது' என, மத்திய தணிக்கை கணக்கு அதிகாரி அளித்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  "2 ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம்,  நேற்று  முன்தினம் பார்லிமென்டில் புயலை கிளப்பியது.இது குறித்து  அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா  குறிப்பிடுகையில்,  "ராஜாவை நீக்க வேண்டும்; இதனால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து வந்தால், நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயார்' என,  தெரிவித்தார்.அமைச்சர் ராஜாவோ, "நான் குற்றவாளியல்ல; பதவி விலக மாட்டேன்' என தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதியும் ராஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும், அமைச்சர் ராஜாவுக்கு சாதகமாகவே கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சியோலில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு நேற்றிரவு டில்லி திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களிடம் குறிப்பிடுகையில், ""ஜெயலலிதா கூறிய கருத்தை தற்போது தான் கேள்விப்படுகிறேன். எனினும் அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் பதில் கூற வேண்டும். தற்போதைக்கு தி.மு.க., எங்கள் கூட்டணியில் தான் உள்ளது.  பார்லிமென்ட் கூட்டம் நடப்பதாலும்,  ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், அதை பற்றி  நான் பேசுவது முறையல்ல,'' என்றார்.
(dinamalar)

No comments:

Post a Comment