Friday, November 12, 2010

கருணாநிதியின் நேரு குடும்பத்து உறவு!

தமிழக முதல்வர் கருணாநிதி, நேரு குடும்பத்துக்கும் அவருக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது என்று கூறியுள்ளார். ஆமாம், ஆமாம். மதுரையில் நேருபிரானுக்குக் கறுப்புக் கொடி காட்டி, அவர் மீது செருப்பு வீசியதில் இருந்து தொடங்கிய உறவல்லவா இது? அதை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியுமா, என்ன?
 இவர்கள் பண்டித நேரு மீது செருப்பு வீசினார்கள். ஆனால், நேருவோ மாநிலங்களவையில் அண்ணா உரையைக் கேட்டு அவருக்கு அதிக நேரம் ஒதுக்கச் சொன்னார். இவர்களுடைய கலாசாரம் இப்படி. அவருடைய பாரம்பரியம் அப்படி. வேறுபாடு இருக்கத்தானே செய்யும்!
 1971-ல் மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் நாட்டுடைமை போன்ற மக்கள் திட்டங்களால் இந்திரா காந்திக்கும் காங்கிரஸýக்கும் ஏற்பட்டுள்ள மக்கள் செல்வாக்கை உணர்ந்து, 1972-ல் சந்திக்க வேண்டிய சட்டசபைத் தேர்தலை, சட்டசபையைக் கலைத்து விட்டு 1971-லேயே சந்தித்து அதிகமான இடங்களைக் கைப்பற்றி கருணாநிதியின் திமுக ஆட்சி பீடம் ஏறியபோது அன்னை இந்திராவோடு ஏற்பட்ட உறவு என்னவாயிற்று?
 கோவை திமுக மாநாட்டில் ஒரு திமுக அமைச்சரே "விதவைகளுக்கு ஓய்வூதியம் என்கிற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். இந்திரா காந்தி விண்ணப்பித்தால் கலைஞர் தருவார்' என்று பேசியதில் அந்த உறவின் பெருமை வெளிப்பட்டது.
 அவசர நிலைக்காலத்துக்குப் பின்னர் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தலைவி இந்திரா, அன்னை அங்கயற்கண்ணியின் மதுரைக்கு வந்தபோது மதுரை தெற்குவாசலில் அவரைக் கொல்ல முயற்சித்த கொடுமையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அன்னையின் உயிரைக் காத்த பழ.நெடுமாறனும், என்.எஸ்.வி. சித்தனும் நல்ல சில காங்கிரஸ்காரர்களும் இன்றும் அதற்குச் சாட்சியாக உள்ளனர்.
 60 வயதுத் தாய் இந்திராவின் வெள்ளைச் சேலை அனைத்தும் ரத்தம். அதற்கு கருணாநிதியின் கழகத்தார் மேடைகளில் தந்த பதிலை இன்றும் தன்மானமுள்ள நல்ல காங்கிரஸ்காரர்களும் பழம்பெரும் நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான தமிழக மக்களும் மறக்கவே மாட்டார்கள். அத்தனை கொடுமை. இந்திராவின் "மாதவிலக்கு ரத்தம்' என்றார்கள் மேடைதோறும் கருணாநிதி கட்சியினர். நேரு குடும்ப உறவை கருணாநிதியின் கழகம் எத்தனை உயர்த்திப் பிடித்தது பாருங்கள்?
 அதன் பின்னர் பிரதமர் மொரார்ஜி தேசாயால் கருணாநிதிக்கு நேரு குடும்ப உறவைப் புதுப்பித்துக் கொள்ள இன்னொரு வாய்ப்புக் கிடைத்தது. தஞ்சாவூர் தொகுதியில் இந்திரா போட்டியிடுவதை ஒத்துக்கொண்ட எம்.ஜி.ஆர்., கடைசி நேரத்தில் அவருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்றார். காங்கிரஸ், சிங்காரவடிவேலை வேட்பாளராக நிறுத்தியது. இதனைப் பயன்படுத்தி, கருணாநிதி உறவைப் புதுப்பித்தார்.
 "நேருவின் திருமகளே வருக! நிலையான ஆட்சி தருக' என்று இந்திரா காந்தியையும், "நேருவின் பேரப்பிள்ளையே, அன்னை இந்திராவின் வீரப்பிள்ளையே' என்று சஞ்சய் காந்தியையும் அழைத்தார். என்றும் இல்லாத அளவில் தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு, இரண்டு மக்களவைத் தொகுதிகளை மட்டுமே தந்தனர்.
 ஜனதா அரசு செய்த வேலையைக் காங்கிரஸýம் செய்தது. எட்டு ஜனதா மாநில அரசுகளைக் கலைத்தது. கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆட்சியையும் இந்திரா காந்தியைக் கட்டாயப்படுத்திக் கலைக்க வைத்தார். ஆனால், தமிழக மக்கள் தமிழக ஆட்சியை மீண்டும் எம்.ஜி.ஆர். வசமே தந்தனர்.
 திருப்பத்தூர் வான்மீகியின் மறைவால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் திமுக ஆதரவு இருக்கும்போதே எம்.ஜி.ஆர். தானாகவே தனி மேடைகளில் காங்கிரûஸ ஆதரித்து மீண்டும் காங்கிரஸ் உறவைப் புதுப்பித்தார். அதன்பின்னர் இந்திரா, காவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார்.
 பெரியவர் வாஜ்பாய், அத்வானி என்று இந்திராவின் அரசியலில் எதிர்முகத் தலைவர்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். நமது முதல்வர் கருணாநிதி மட்டும் இறுதி அஞ்சலி செலுத்தாதது மட்டுமல்ல, சென்னைக்கு வந்த இந்திராவின் அஸ்திக்குக்கூட மரியாதை செலுத்தவில்லை. நேரு குடும்பத்து உறவை அவர் மதித்துப் போற்றிய விதம் இது.
 அதைவிடக் கொடுமை அத்தனை பெரிய கொடூரக் கொலையை ஏதோ சாதாரணச் சாவு என்று கருணாநிதி வர்ணித்தார். அவர் தோற்று விட்டாராம். அதனால், இந்திராவின் மரணத்தை, சாவுக்கு வாக்களித்து விட்டார்கள் என்று கேலி செய்தார். எம்.ஜி.ஆரின் நோய்க்கும் இந்திராவின் சாவுக்கும் கிடைத்த வெற்றி என்று தனது தோல்வியை நியாயப்படுத்தினார் கருணாநிதி. நேரு குடும்ப உறவை அவர் பேணிய பெருந்தன்மை, தமிழக மக்களுக்கு மிகமிகத் தெளிவாகத் தெரிந்தது.
 காங்கிரஸிலேயே இருந்து இந்திராவிடமும் பதவிகள் பெற்று ராஜீவ் காந்தியோடேயே இருந்த வி.பி.சிங், பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு போஃபர்ஸ் ஊழல் என்றபோது தமிழ்நாடு முழுவதும் அட்டை பீரங்கிகளை வைத்து அட்டகாசம் செய்தவர் இதே கருணாநிதி. அதைக் காங்கிரஸôர் மறந்திருக்கலாம். மக்கள் மறந்துவிட்டிருக்க மாட்டார்கள்.
 பிகார் தலைநகரம் பாட்னாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் வி.பி. சிங்கோடும் பல வட நாட்டுத் தலைவர்களோடும் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, "நான் ஒன்றும் வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தவனில்லை' என்று ராஜீவ் காந்தியைக் கேலி செய்தார்.
 அன்னை சோனியா என்கிறாரே இன்று, அவரைத்தான் வெளிநாட்டுப் பெண் என்றார். இன்று தமிழகத்தில் பதவிகளில் வீற்றிருக்கிற காங்கிரஸ் பெரியவர்கள் யாரேனும் சோனியாவிடம் இதைச் சொல்வார்களா? அனைவரும் கருணாநிதி காங்கிரஸில் அல்லவா இருக்கின்றனர்; அவருக்குக் குற்றேவல் புரியும் இவர்களால் உண்மையை எடுத்துரைக்க முடியுமா?
 நண்பர் வைகோவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அன்றுதான் வி.பி.சிங்., நண்பர் வைகோ போன்றவர்களுக்கும் வரலாறு தெரியாது என்று தெரிந்து கொண்டனர் அறிஞர் பெருமக்கள்.
 பாட்னாதான் சந்திரகுப்த மெüரியன் என்ற மாபெரும் மன்னனது ஆட்சித் தலைநகரம். அதன் பெயர் பாடலிபுத்திரம். அந்த சந்திரகுப்த மெüரியன் செல்யுகஸ் நிகோடர் என்கிற கிரேக்க வீரனின் தங்கையை மணந்திருந்தான். அங்கே போய் நான் ஒன்றும் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவனில்லை என்றார் கருணாநிதி. அவருக்கு வரலாறு தெரியாதென்றால் புரிகிறது. மற்றவர்களுக்கு? நேரு குடும்ப உறவை சோனியா வெளிநாட்டுக்காரர் என்ற விமர்சனத்தின் மூலம் புதுப்பித்துக் கொண்டார் கருணாநிதி.
 வி.பி.சிங்கை, தமிழ்நாட்டுக்குக் கூட்டிவந்து சமூகநீதி காத்த வீரர் என்று புகழாரம் சூட்டுகிற போதெல்லாம், ராஜீவ் காந்தியின் மீது அவர் வீசிய சொல்லம்புகள் நேருவின் குடும்பத்தின் மீது அவருக்கிருந்த பற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தேர்தலின்போது ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிலே படுகொலை செய்யப்பட்டார். அவரது பூத உடலுக்குக் கருணாநிதி மரியாதை செலுத்தினாரா?
 அவரது அஸ்தி தமிழகத்துக்கு வந்ததே, அப்போதேனும் மரியாதை செலுத்தினாரா? நேருவின் குடும்பத்தோடு அவர் கொண்ட உறவின் பெருமைகள் இவை. இதெல்லாம் சோனியாவுக்குத் தெரியுமா?
 நேரு பிரானை மிகப்பெரிய இசையரசியோடும் மவுண்ட் பேட்டன் மனைவியோடும் சேர்த்து மேடைகள்தோறும் மிகக் கேவலமாக நையாண்டி செய்து விமர்சித்த திராவிட இயக்கம், நேரு குடும்பத்து உறவு குறித்துப் பேசுவது விந்தையிலும் விந்தை!
 இதுபற்றி கேள்வி கேட்க ஒரு காங்கிரஸ்காரனாவது இருக்கிறானா, தமிழகத்தில்? "திமுகவுடனான எங்களது உறவு தொடரும்' என்று கிளிப்பிள்ளைபோலப் பேசி, அவரவர் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதைப் பற்றி மட்டுமே கவலைப்படும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கும் நினைவாற்றல் என்பதே இல்லாமல் போய்விட்டது. கழகக் காங்கிரஸ்காரர்களுக்கு இது குறித்தெல்லாம் கவலை இல்லை.
 நமது தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வள்ளுவப் பேராசானின் வழியொற்றி நடப்பவர்கள். கருணாநிதிக்கு நன்றிக்கடன்பட்டவர்கள். இவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு திருக்குறள் - "நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்பதுதான். இதற்கு நேர்மாறானது கருணாநிதியின் அரசியலில் குறளோவியம் என்று யார் போய் சோனியாவிடம் எடுத்துரைப்பது?(dinamani_

No comments:

Post a Comment