Sunday, November 28, 2010

ஸ்பெக்ட்ரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார்- பிரணாப் முகர்ஜி





 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என்று அவை முன்னவரும் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அரசு தரப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவு குறித்து பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் பிரணாப் தொலைபேசியில் பேசினார். அப்போது, அலைக்கற்றை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் முழு விவாதம் நடத்தும் அரசின் முடிவை அவர்களிடம் எடுத்துக் கூறினாராம்.
  ஆனால் அவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்களாம். நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை (ஜேபிசி) தவிர வேறு எதையும் ஏற்பதற்கு இல்லை என்று திட்டவட்டமாக
அவர்கள் தெரிவித்துவிட்டனர். அவையை நடத்த வேண்டியது அரசின் பொறுப்பு என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.
2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி அமளியில் ஈடுபட்டு வருவதால் குளிர் காலத் தொடர் தொடங்கி 11 நாள்கள் இரு அவைகளும் அலுவல் ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன. எஞ்சிய நாள்கள் அவையை சுமுகமாக நடத்துவதற்காக அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளை சமாதானம் செய்வதற்காகவே முழு விவாதத்துக்கு தயார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த கூட்டத் தொடரில் 2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்து ஏற்கெனவே விவாதம் நடத்தப்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்பதில் பாஜக தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையில் முந்தைய அனுபவங்கள் சிறப்பாக இல்லை. போஃபர்ஸ் விவகாரம், ஹர்ஷத் மேத்தா விவகாரம் போன்றவற்றில் இதற்கு முன் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பிரச்னைகளையும் எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி தங்களது தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டன என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்குப் பதில், இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
அலைக்கற்றை விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்பதையும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணையைத் தொடருவது என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் ஒற்றுமை: இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஆதரிப்பதாக கூறப்படுவதை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது மறுத்தார். அரசின் முடிவு என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முடிவு. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று அவர் கூறினார்.
முதலில் பொதுக் கணக்குக் குழு விசாரணை செய்யட்டும். அடுத்து என்ன என்பதை அதன் பிறகு முடிவு செய்யலாம் என்றார் அவர்.
அனைத்துக் கட்சி கூட்டம்: நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கும் பொருட்டு திங்கள்கிழமை 4 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை மக்களவைத் தலைவர் மீராகுமார் கூட்டியிருந்தார். ஆனால் பிரதான எதிர்க்கட்சி தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி இருவரும் மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள செல்வதால் இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை இந்தக் கூட்டம் நடைபெறலாம் என்று தெரிகிறது.(dinamani)

No comments:

Post a Comment