Wednesday, November 24, 2010

பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுவது நகைப்புக்குரியது' ஜெயலலிதா: "பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுவது நகைப்புக்குரியது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
ஈ.வெ.ரா.,வின் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர் என தனக்குத் தானே தம்பட்டம் அடித்து, தஞ்சை பெரிய கோவிலின் பிரதான வாயில் வழியாகச் சென்றால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், பின்பக்க வாசல் வழியாக செல்லும் கருணாநிதி; ஜோதிடரின் சொல்லுக்கு இணங்க மஞ்சள் துண்டை அணிந்துகொள்ளும் கருணாநிதி; ஈ.வெ.ரா.,வின் கொள்கை குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றவுடன், குடும்பத்துடன் திருக்குவளைக்குச் சென்று, குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்தது, கோவில் கும்பாபிஷேகங்களில் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்வது, வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் பின்னால், தன் குடும்பத்தினர் சுற்றுவது - இவற்றை எல்லாம் மறந்து, பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுவது நகைப்புக்கு உரியது.

அண்ணாதுரையால் துவங்கப்பட்ட தி.மு.க.,வை பணக்கார இயக்கமாக மட்டுமல்லாமல்; குடும்ப இயக்கமாகவே மாற்றிய பெருமை, கருணாநிதியையே சாரும். இன்று, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியை பெறுவதற்கும், சொத்து களைக் குவிப்பதற்கும் தானே தி.மு.க.,வை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்? முன்னாள் பிரதமர் இந்திரா மதுரை வந்தபோது, அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டு, அவருக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தை, பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் வகையில் கொச்சைப்படுத்திவிட்டு, "நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' எனக்கூறியதும், விதவை ஓய்வூதியத் திட்டத்துக்கு இந்திரா விண்ணப்பித்தால் பரிசீலிக்கத் தயார் என தி.மு.க., அறிவித்ததும்; காமராஜ், கக்கன், ராஜாஜி என அனைத்து தலைவர்களையும் கருணாநிதி வசைபாடியதும், ராஜிவ் கொலை வழக்கில் சந்தேகத்தின் நிழல் கருணாநிதி மீது படிந்திருக்கிறது என ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியதும், மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஸ்பெக்ட்ரம் வழக்கை நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து வந்த சி.பி.ஐ., அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், இந்த மாறுதலில் கருணாநிதியின் தலையீடோ, தி.மு.க.,வின் தலையீடோ நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. சூழ்நிலைச் சான்று தான் இதற்கு ஆதாரம். இப்போது, தொலைத்தொடர்புத் துறைச் செயலராக இருந்தவரே மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதிலும் கருணாநிதியின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம், மக்கள் மனதில் தற்போது ஏற்பட்டு உள்ளது. நிரா ராடியா உரையாடல்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, கருணாநிதி இதுவரை வாய் திறக்கவில்லை. இதேபோல, ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடே கொந்தளித்துக்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரை கனிமொழி ரகசியமாக சந்தித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதன் மர்மம் என்ன என்பது குறித்து கருணாநிதி இதுவரை விளக்கவில்லை.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.(dinamalar)

No comments:

Post a Comment