Tuesday, November 23, 2010

கலைகிறது கலைஞர் வேடம்!

     ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது.  ராஜா மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் எதிர் கட்சிகள் மக்களவையை நடத்த விடுவதாக இல்லை.  ராஜா மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு மன்மோகன் சிங்கால் பதில் சொல்ல முடியவில்லை.
 கோர்ட்டும் இந்த விஷத்தை விடுவதாக இல்லை.  இந்தியாவில் இதுவரை செய்யாத ஊழலை தி.மு.க மந்திரி ராஜா செய்து அந்த கட்சியை மக்கள் மன்றத்தின் முன்பு  தலைகுனிய வைத்துள்ளார்.  
     அரசியலும் ஊழலும் பிரிக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது இந்தியாவிற்கு பெருமையான விஷயம் அல்ல.  உலக அரங்கில் இந்தியாவின் மானத்தை கப்பலேற்றி விட்டிருக்கிறார் ராஜா என்றால் அது மிகையாகாது.  ஆரம்பத்தில் ராஜா மீது குற்றம் சுமதப்பட்டபோதே கலைஞர் அதை விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த தலைகுனிவை சந்திக்க நேர்ந்திருக்காது.  ஆனால் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டே மௌனம் காத்திருக்கிறார் கலைஞர்.  இது அவர் மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை தவிடுபொடியாகிவிட்டது.  
     ராஜா மீதான ஊழல் குற்றசாட்டை காங்கிரஸ் கட்சியே மறுக்க முடியாத நிலையில் குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருக்கும் சூழ்நிலையில் கலைஞர் மட்டும் இன்றும் ராஜா குற்றமற்றவர் உத்தமன் என்று கூறிவருவது நகைக்கும் வகையில் உள்ளது.  இது அவருடைய இரட்டை நிலையை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.  
     இலங்கை பிரச்சினை, அதிகரித்துவரும் குற்ற செயல்கள், கடுமையான விலை வாசி உயர்வு, குடும்ப சண்டை என்று ஏற்கனவே மக்கள் மன்றத்தின் முன்பு குற்றவாளியாக கைகட்டி நிற்கும் தி.மு.க விற்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.  இந்த நிலையில் இன்னும் இரட்டை வேடம் போட்டுகொண்டிருப்பது உண்மையான அரசியல் வாதிக்கு அழகல்ல.  
      இன்னமும் இலவசங்களை சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றமுடியாது. மக்கள் முழித்துகொண்டார்கள்.  விலைவாசி  உயர்வு என்பது அடித்தட்டு மக்களையும் பாதித்திருக்கிறது.  இதற்கெல்லாம் வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதில் சொல்ல காத்துகொண்டிருக்கிரார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.   
                                                                                                                       -அன்பு.நெட் 

No comments:

Post a Comment