Saturday, December 4, 2010

முதல்வர் கருத்துக்கு இன்றும் பதில் வருமா?



"ஸ்பெக்ட்ரம்' விவகாரமும், அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜா ராஜினாமாவிற்கு பிறகு காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு அதிகரித்துள்ளது. இக்கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் அரசியல் அரங்கில் வலுத்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல்,
முதல்வர் கருணாநிதி கொளுத்திப்போடும் வெடிகளும், ஏற்கனவே கடுப்பில் இருக்கும் காங்கிரசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சில நாட்களுக்கு முன், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த வேளாண்துறை ஊழியர்கள் மாநாட்டில் முதல்வர் பேசும்போது, "மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பிரித்து பேசுபவர்களுக்கு' தனியாக பாடம் நடத்தினார். அதோடு, "சேர்ந்திருப்பது தீது என்றால் சொல்லுங்கள்; யோசிக்கிறோம்; இப்போது இதை தான் சொல்ல முடியும்' என தடாலடியாக பேசி அதிர்ச்சி கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, "கூட்டணியில் இருந்து பிரிந்தால் காங்கிரசுக்கு தான் நஷ்டம் ' என்றார். என்ன தான் இரண்டு கட்சிகளுக்கும் நஷ்டம் என முதல்வர் கருணாநிதி மறுபடியும் விளக்கமளித்தாலும், முதல்வரின் பேச்சு காங்கிரசாரை சூடேற்றியுள்ளது.மத்திய அரசில் தி.மு.க., பங்கு வகிக்கிறது; மாநிலத்தில் எங்கள் ஆதரவில் ஆட்சி நடந்தும், எங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்தில்தான், இதையும் தாங்கிக் கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில், முதல்வர் இப்படி பேசியிருக்கக் கூடாது என்று கருத்து காங்கிரசார் மத்தியில் பரவியுள்ளது.

தி.மு.க.,விற்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் சமீபகாலமாக அமைதி காத்து வருகிறார். குறிப்பாக, காங்கிரஸ் கூட்டணி குறித்த முதல்வரின் சமீபத்திய பேச்சு குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.இந்த மவுனம் காரணமாக தொண்டர்கள் உற்சாகத்தை இழந்து வருகின்றனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்புவரை, காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி ஒன்றாக மேடையில் ஏறி காட்சியளித்து தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி வந்தனர். இந்த மேடைகளில் காரசாரமான பேச்சுகளும் இடம்பெற்று வந்தன.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, இன்று(5ம்தேதி) சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் மேம்பாலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அம்பேத்கர் நினைவு தின பொதுக் கூட்டம் நடக்கிறது. சமீபத்தில் கட்சியில் இணைந்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ஏற்பாட்டில், பிரமாண்டமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆங்காங்கே பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று பேசவுள்ளனர்.

இந்த மேடையில் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கூட்டணி தொடர்பாக டில்லி தலைமையின் முடிவை அறிந்து வைத்திருக்கும் மத்திய அமைச்சர் சிதம்பரம், முதல்வரின் பேச்சிற்கு எவ்வகையான விளக்கத்தை அளிக்கப் போகிறார் என்பதை காங்கிரஸ் தொண்டர்களோடு சேர்ந்து ஆளுங்கட்சியும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறது. அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், இந்த பொதுக்கூட்டம் அமையுமா என்பதற்கான விடை இன்று இரவு தெரிந்து விடும். 
(dinamalar)

No comments:

Post a Comment