Wednesday, January 26, 2011

அசிங்கமான அரசியல் செய்கின்றனர்-விஜயகாந்த்


""மக்களை அழ விடாமல், அவர்கள் வருமானத்தை சுரண்டாமல், விலைவாசி உயர்வைக் குறைத்து, சுகாதாரம், சமச்சீர் கல்வி, வேலைவாய்ப்பு அளித்து, எப்போதும் அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். நான் யாருடன் கூட்டணி வைக்கிறேனோ
அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், '' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 5,000 பேர், பல கட்சிகளில் இருந்து விலகி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று இணைந்தனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் சேகர், தேர்தல் நிதியாக 10 லட்ச ரூபாயை விஜயகாந்திடம் வழங்கினார்.

சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது:ரேஷன் பொருட்கள் விலையை கிலோவுக்கு 10 ரூபாய் குறைத்து, அது பிப்ரவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல பிப்ரவரி மாதங்கள் வந்துள்ளன.அப்போதெல்லாம் விலையைக் குறைக்காதவர்கள், தேர்தல் வருகிறது என்பதால் விலையைக் குறைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். உண்மையிலேயே விலையைக் குறைக்க வேண்டும் என்றால் வெங்காயம், தக்காளியை 10 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும்.பெட்ரோல் விலையில், 100 ரூபாய்க்கு 52 ரூபாயை வரியாக வசூல் செய்கின்றனர். அந்த வரிப்பணத்தை பாதியாவது குறைத்து கொடுத்திருக்க வேண்டும். இதையெல்லாம் சுட்டிக் காட்டினால் விஜயகாந்த் குடித்துவிட்டு பேசுவதாக கூறுகின்றனர்.

குடித்தால் உளறுவார்கள்; நான் நியாயத்தைத் தான் கேட்கிறேன். உண்மையை மறைத்து, நான் குடித்து விட்டு பேசுவதாக பொய் பிரசாரம் செய்து, அசிங்கமான அரசியல் செய்கின்றனர். "முதல்வர் பதவியை விட தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறேன்' என்கிறார் கருணாநிதி.மக்கள் அவருக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க முடிவு செய்து விட்டதை முன்கூட்டியே அறிந்து, இந்த முடிவை எடுத்துள்ளார். படுத்த படுக்கையாக இருப்பது போன்று பாசாங்கு செய்து, மக்களின் அனுதாப ஓட்டுக்களை வாங்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால், பொய்யின் உச்சத்திற்கு உச்சம் கருணாநிதி தான்.

எனது மண்டபத்தை இடித்துவிட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு ஒரு பாலத்தை கட்டியுள்ளனர். எத்தனையோ பாலங்களை திறந்து வைத்த, கருணாநிதி இந்த பாலத்தை மட்டும் திறந்து வைக்காதது ஏன்?வரும் 30ம் தேதி நடக்கவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கருணாநிதி டில்லி செல்ல இருக்கிறார். கடந்த முறை நடந்த முதல்வர்கள் மாநாட்டில், துணை முதல்வர் ஸ்டாலின் தான் பங்கேற்றார். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்யவே, கருணாநிதி டில்லி செல்கிறார். தனக்கு ஒரு தேவை இருந்தால் மட்டுமே கருணாநிதி அங்கு செல்வார்.

மக்கள் பிரச்னையை பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் அவருக்கு கவலையில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடக்கவில்லை; வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர். ஒருவர் சொந்தமாக கடை வைத்து, அங்கு கொள்முதல் விலையைவிட குறைந்த விலையில் பொருட்கள் விற்றால் அதற்கு என்ன பெயர்?.இழப்பு ஏற்படுத்தும் அமைச்சரை வைத்துக் கொண்டு அவருக்கு சாதகமாக "ஜால்ரா' போடுகின்றனர். பணம் என்ற ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் என கணக்கு போடுகின்றனர்.என்னை அழிக்கவும் திட்டம் போடுகின்றனர்.

இவர்களுக்கு, ஓட்டு மூலம் மக்கள் பாடம் கற்றுத்தர வேண்டும். பொதுமக்களை அழ விடாமல், அவர்கள் வருமானத்தை சுரண்டாமல், விலைவாசியை குறைத்து, சுகாதாரம், சமச்சீர் கல்வி, வேலைவாய்ப்பு அளித்து, எப்போதும் அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்.நான் யாருடன் கூட்டணி வைப்பேன் என்பதை இப்போது கூற முடியாது. ஆனால், யாருடன் கூட்டணி வைக்கிறேனோ அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார். மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.(dinamalar)

No comments:

Post a Comment