Friday, February 11, 2011

பால் நிறுவனங்களை மிரட்டவில்லை : அமைச்சர் விளக்கம்


 பால் உற்பத்தியாளர் போராட்டம், தனியார் பால் பண்ணைகள், "சீல்' வைக்கப்பட்டது தொடர்பாக, பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு முறை கூட பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், தி.மு.க.,
ஆட்சியில் நான்கு முறை பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த முறை பால் உற்பத்தியாளர்கள் விலை கேட்டு போராட்டம் நடத்தி, தாங்களாகவே கைவிடும் நிலை ஏற்பட்டது. அப்போது கூட, அவர்களை அழைத்து பேசி, பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுத்துள்ளோம்.

பால் உற்பத்தியாளர்கள் நடத்தும் போராட்டத்தால், பால் கொள்முதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் பால் வினியோகம் சரியாக நடந்து வருகிறது. சென்னைக்கு தேவையான பத்தரை லட்சம் லிட்டர் பால் தினந்தோறும் சப்ளையாகி வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்து. முதல்வரிடம் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். எங்களுக்கு தேவையான பால் முழுமையாக கிடைத்து வருவதால், தனியாரிடம் இருந்து பால் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தனியார் நிறுவனங்களிடம் இருந்து பால் பெறுவதற்கு எந்த முயற்சியும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை; அவர்களை மிரட்ட வேண்டிய அவசியமும் இல்லை.
சில தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் லைசன்ஸ் இல்லாமல் இயங்குகின்றன; அவற்றை, "சீல்' வைத்துள்ளோம். சில இடங்களில் பாலில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில மாவட்டஙகளில் மட்டும் பால் உற்பத்தியாளர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், பால் கொள்முதலிலோ, சப்ளையிலோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை நிரந்தரம் செய்ய சட்ட ரீதியாக வாய்ப்பில்லை. அவர்களின் கோரிக்கை குறித்து உரிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மதிவாணன் தெரிவித்தார்.
இப்போது தான் தெரிகிறதா : அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு குறித்து, தனியார் பால் பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது: லைசென்ஸ் இல்லாமல் பால் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குவதாக அமைச்சர் கூறுகிறார். லைசென்ஸ் இல்லை என்பது இப்போது தான் தெரிகிறதா? கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர். தேர்தல் நெருங்கும் போது, மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படக் கூடாது என்பதற்காக அரசு எடுக்கும் இது போன்ற விஷமத்தனமான நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.(dinamalar)

No comments:

Post a Comment