Thursday, February 10, 2011

மோசடியில் மிகப்பெரியது ஸ்பெக்ட்ரம்: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு


 "ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்குக்கு இணையானது எதுவும் இல்லை. எனவே, இந்த வழக்கு விவகாரத்திற்கு மத்திய அரசு முதல் முன்னுரிமை அளிக்க வேண்டும். சிறப்பு கோர்ட் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு
விரைவில் உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர்.

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்த ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கு விசாரணையின் போது, பொதுநல அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், ""சுவான் டெக்னாலஜி உட்பட, ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற பல பெரிய கம்பெனிகளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை,'' என்றார். சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ""ஸ்பெக்ட்ரம் ஊழலில் பயனடைந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து முடிவு செய்ய சி.பி.ஐ.,க்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை. விசாரணை வரம்பை நாங்கள் அதிகப்படுத்தியுள்ளோம். ஒரு மாதகாலம் அவகாசம் கொடுத்தால், யார் யார் பலனடைந்தனர் என்பது தொடர்பான விவரங்களைத்தர முடியும். இருந்தாலும், ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பான முதல் குற்றப் பத்திரிகையை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் சி.பி.ஐ., தாக்கல் செய்யும்,'' என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, ""சிறப்பு கோர்ட் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்கப்படும்,'' என்றார். இதன்பின் நீதிபதிகள் கங்குலி மற்றும் சிங்வி தெரிவித்ததாவது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சிறப்பு கோர்ட்டில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் முன், அது தொடர்பான முழு விவரங்களையும் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யும் முன், வரைவு குற்றப் பத்திரிகையை நாங்கள் பரிசீலனை செய்வோம். ஸ்பெக்ட்ரம் மோசடி குறித்து விசாரிக்க, மத்திய அரசு சிறப்பு கோர்ட் அமைத்தால் மட்டுமே, இந்த வழக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவுக்கு வரும்.

ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கிற்கு இணையானது எதுவும் இல்லை. எனவே, இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிறப்பு கோர்ட் அமைப்பது தொடர்பான உறுதி மொழியை விரைவில் தெரிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக, வேறு எந்த கோர்ட்டும் எவ்விதமான உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. இந்த வழக்கானது நியாயமான முடிவுக்கு வர வேண்டும். இப்போதைக்கு சுப்ரீம் கோர்ட்டிற்குதான் சி.பி.ஐ., பதிலளிக்க வேண்டும். சி.பி.ஐ.,யின் விசாரணையில் யாரும் குறுக்கிடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) 2003ல் எடுத்த முடிவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி நடக்கக் காரணம். அதனால், டிராய் அதிகாரிகளுக்கு எதிராக சி.பி.ஐ., எடுத்த நடவடிக்கை என்ன? இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.(dinamalar)

No comments:

Post a Comment