""ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் வெறுப்பை மறந்து தேர்தல் பணியில் ஈடுபடுவர்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இதில்,
முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பங்கேற்று பேசியதாவது:காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, தி.மு.க.,வுடன் தான் கூட்டணி என, மேலிடத்தின் கசப்பான முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.தொகுதி பேச்சுவார்த்தையின் போது நிருபர்களிடம், "காங்கிரஸ் 234 தொகுதியையும் கேட்கிறது' என, கருணாநிதி கூறியுள்ளார். மூத்த அரசியல்வாதி; அவர் கூறியதை கேலி, கிண்டலாக ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையைத்தான் அவர் கூறியுள்ளார். அவர் கூறுவதுபோல, எங்களுக்கு 234 தொகுதியும் வேண்டும்; பாதி கொடுத்தாலும் போதும். கண்டிப்பாக ஆட்சியில் 50 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு அமைச்சர் பதவி வேண்டும்.துணை முதல்வர், முதல்வர் பதவி கேட்கவில்லை. அமைச்சர்களை மட்டும் தான் கேட்கிறோம். கூட்டணி அமைத்து போட்டியிடும்போது, ஓட்டளிக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இதுவரையில் எந்தவித உதவியையும் செய்ய முடியவில்லை. குறிப்பாக ஒரு அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்குக்கூட பரிந்துரை செய்ய முடியவில்லை. "கொடுப்பதை கொடுத்து விட்டு, தர வேண்டியதை பெறு' என, தொண்டர்களைப் பார்த்து நாங்கள் கூறும் வகையில் உள்ளோம்.
டில்லியில் ஒரு நீதி, தமிழகத்தில் ஒரு நீதியாக இருந்து வருகிறது. மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி என்ற பேசியே பழகியவர்கள் தமிழகத்தில் உள்ளனர். எனவே, வரும் சட்டசபைத் தேர்தலுக்குப்பின், கண்டிப்பாக ஆட்சியில் பங்கு பெற்று, அதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு செய்ய வேண்டியதை செய்வோம்.ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் வெறுப்பை மறந்து தேர்தல் பணியில் ஈடுபடுவர். கடந்த ஐந்தாண்டுகளில் மெஜாரிட்டி இல்லாவிட்டாலும் காங்கிரஸ் துணையுடன் ஆட்சி செய்து வந்த தி.மு.க.,வால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு ஏழையும், எந்த ஒரு பயனையும் அடையவில்லை. எனவே, வரும் தேர்தலுக்குப்பின், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைவர் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்டத்தலைவர் துரைவேலன், விவசாய பிரிவு செயலாளர் ராஜதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment