Wednesday, March 2, 2011

உலக கோப்பையில் "மெகா' அதிர்ச்சி


உலக கோப்பை தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. பரபரப்பான லீக் போட்டியில் அயர்லாந்து அணி, இங்கிலாந்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கெவின் ஓ'பிரையனின் அதிவேக சதம், அயர்லாந்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலிரவு) இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதின. "டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
பீட்டர்சன் அதிரடி:
 இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஸ்டிராஸ், கெவின் பீட்டர்சன் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அயர்லாந்து பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த போது, ஸ்டிராஸ் (34) அவுட்டானார். மறுமுனையில் அதிரடி காட்டிய பீட்டர்சன் (59) நம்பிக்கை அளித்தார்.
டிராட் சாதனை:
பின் ஜோனாதன் டிராட், இயான் பெல் இணைந்து அசத்தலாக ஆடினர். டிராட் 64 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை(21 போட்டி) எடுத்த சக வீரர் பீட்டர்சன், விவியன் ரிச்சர்ட்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரது சாதனையை சமன் செய்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில், பெல் (81) வெளியேறினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டிராட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார். கோலிங்வுட் (16), பிரையர் (6), பிரஸ்னன் (4), மைக்கேல் யார்டி (4) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இங்கிலாந்து அணி 50 ஒவரில் 8 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து சார்பில் ஜான் மூனே 4, டிரன்ட் ஜான்ஸ்டன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
கெவின் அதிரடி:கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே போர்ட்டர்பீல்டு(0) போல்டானார். ஸ்டர்லிங்(32), ஜாய்ஸ்(32), நியால் ஓ'பிரையன்(29) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இதற்கு பின் கெவின் ஓ' பிரையன், கியுசக் இணைந்து "சூப்பராக' ஆடினர். இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்த கெவின் அதிரடியாக ரன் குவித்தார். சுவான், பிரஸ்னன், ஆண்டர்சன் என அனைவரது பந்துகளிலும் சாதாரணமாக "சிக்சர்களை' பறக்க விட்டார். யார்டி பந்தில் 2 ரன்களை தட்டி விட்ட கெவின், 50 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். 6வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்த நிலையில், கியுசக்(47) ரன் அவுட்டானார். கெவின் 113 ரன்களுக்கு(13 பவுண்டரி, 6 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த மூனே(33) கைகொடுக்க, அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
--------------
அதிவேக சதம்
நேற்று 50 பந்துகளில் 100 ரன்களை எட்டிய அயர்லாந்து வீரர் கெவின் ஓ' பிரையன் உலக கோப்பை அரங்கில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்தார். இவர், ஆஸ்திரேலியாவின் ஹைடன் சாதனையை(66 பந்துகள், எதிர், தென் ஆப்ரிக்கா, 2007) தகர்த்தார். தவிர, சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்தவர்களின் வரிசையில் 6வது இடத்தை பிடித்தார். இப்பட்டியலில் பாகிஸ்தானின் அப்ரிதி முதலிடத்தில் ( 37 பந்து, எதிர் இலங்கை, 1996) உள்ளார்.
--------------
 "சேஸ்' சாதனை
நேற்று அபாரமாக ஆடிய அயர்லாந்து அணி, உலக கோப்பை அரங்கில் அதிக ரன்களை(329/7) "சேஸ்' செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் 1992ல் இலங்கை அணி அதிகபட்சமாக 313 ரன்களை(எதிர், ஜிம்பாப்வே) "சேஸ்' செய்திருந்தது.
--------
இங்கிலாந்துக்கு அவமானம்
"கிரிக்கெட்டின் தாயகம்' என்று போற்றப்படும் இங்கிலாந்துக்கு நேற்று மிகப் பெரும் "அடி' விழுந்தது. கத்துக்குட்டி அணியாக வர்ணிக்கப்பட்ட அயர்லாந்திடம் பரிதாபமாக வீழ்ந்தது. தாங்கள் சாதாரண அணி அல்ல என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ள அயர்லாந்து அணி, அடுத்த போட்டியில் தான் எதிர்கொள்ள இந்திய அணிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.(dinamalar)

No comments:

Post a Comment