Friday, March 4, 2011

41 சீட் ஒதுக்கீடு: ஜெ., - விஜயகாந்த் ஒப்பந்தம்


 அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு கையெழுத்தானது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கின. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நீடித்த நிலையில், கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சென்று, அக்கட்சி நியமித்திருந்த குழுவினருடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையைத் துவங்கினர்.

பெரிய எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில், இரு கட்சி தொண்டர்களும் உற்சாகமடைந்தனர். அதை அதிகரிக்கும் வகையில், ஜெயலலிதாவின் 63வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், விஜயகாந்த் சார்பில் பூங்கொத்து வழங்கப்பட்டது. முதல்கட்ட சந்திப்பில், இரு தரப்பிலும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்பார்ப்பு குறித்த தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.இதையடுத்து வந்த நாட்கள் தேய்பிறை என்பதால், கூட்டணியை இறுதி செய்து அறிவிப்பதற்கு அமாவாசை நாளான நேற்று, நாள் குறிக்கப்பட்டது. இந்த நாளில், ஜெயலலிதா - விஜயகாந்த் சந்திப்பு நிகழும் என்றும், கூட்டணி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது எனவும், "தினமலர்' நாளிதழில் கடந்த 2ம் தேதி செய்தி வெளியானது.

இரு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மத்தியில் ஜெ., - விஜயகாந்த் சந்திப்பு எப்போது நிகழும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. நேற்று மதியம், தனது கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த், விருப்பமனு தாக்கல் நடப்பதை பார்வையிட்டார். விருப்ப மனு தாக்கல் செய்ய பெருந்திரளாக வந்திருந்த நிர்வாகிகளும், விஜயகாந்த் எப்போது போயஸ் கார்டன் செல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.

ஆனால், இரவு 8 மணிக்கு விஜயகாந்த் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால், காலை முதல் நீடித்த பரபரப்பு திசை திரும்பியது. யாரும் எதிர்பார்க்காத நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு விஜயகாந்த், தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதீஷ், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர், போயஸ் கார்டன் சென்றனர். அவர்களை அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், வாசலில் நின்று வரவேற்றனர்.ஜெயலலிதாவும் விஜயகாந்தும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிய பின், 20 நிமிடங்கள் பேசினர். முடிவில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டனர். ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு திரும்பும்போது, விஜயகாந்த் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. அதன்பின், அ.தி.மு.க., தரப்பிலிருந்து 41 தொகுதிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டதற்கான ஒப்பந்த நகல் வழங்கப்பட்டது. தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் எவையெவை என்பதை, விரைவில் இரு கட்சித் தலைவர்களும் பேசி முடிவு செய்வர்.

எப்படி இருக்கீங்க விஜயகாந்த்? நலம் விசாரித்த ஜெயலலிதா! போயஸ்கார்டனுக்கு நேற்றிரவு வந்த விஜயகாந்தை, அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் வாயிலில் நின்று வரவேற்றனர். அதன் பின், வரவேற்பறையில் காத்திருந்த ஜெயலலிதாவை விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், சுதிஷ் ஆகியோர் சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.தொடர்ந்து, "எப்படி இருக்கீங்க விஜயகாந்த்' என, ஜெ., முதலில் நலம் விசாரித்துள்ளார். "நல்லாயிருக்கேம்மா' என்று விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். அடுத்ததாக, "வீட்டில் எல்லோரும் எப்படியிருக்காங்க' என, ஜெ., விசாரித்துள்ளார்.

தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஜெ., நலம் விசாரித்தார். அவரது மனைவி குறித்தும் கேட்டறிந்தார். தே.மு.தி.க., இளைஞரணி செயலர் சுதிஷிடம், "கல்லூரி எப்படி நடக்கிறது' என்று விசாரித்தார். முன்கூட்டியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து விஜயகாந்த் கேட்க, "தேர்தலை தள்ளி வைக்க வேண்டுமென தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்' என, பதில் அளித்தார் ஜெ.,"இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தேர்தல், போர் போன்று கடுமையாக இருக்கும். நாம் முழுமூச்சுடன், முழு பலத்துடன் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும்' என, விஜயகாந்திடம் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெ., - விஜயகாந்த் சந்திப்பு - மணிக்கு மணி எகிறிய டென்ஷன் : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே கூட்டணி உருவாகியுள்ளது. இரு கட்சி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர், சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் சந்திந்து தொகுதி பங்கீடு தொடர்பாக, கடந்த 24ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்தித்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என்ற தகவல் வெளியானது. இதனால், இருகட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நேற்று, மணிக்கு மணி நடந்தது என்ன என்பது குறித்த விவரம்:

இடம்: தே.மு.தி.க., தலைமை அலுவலகம்
நேரம்:
 காலை 10:00 : ஜெயலலிதா - விஜயகாந்த் சந்திப்பு நடக்கும் என, தகவல் பரவியது. தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், விஜயகாந்தை வழிஅனுப்பி வைப்பதற்காக கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.

நேரம்: காலை 11.00 : தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்பமனு வாங்கும் வைபவம் மூன்றாம் நாளாக தொடர்ந்தது. கட்சி அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலர் சுதீஷ் அங்கு வந்து விருப்ப மனுக்கள் பெற்றனர். அதே நேரத்தில், மதியம் 1.30 மணிக்கு விஜயகாந்த், போயஸ் கார்டன் செல்வார் என்ற பரபரப்பு எழுந்தது.

நேரம்: பகல் 12.00 : வழக்கமாக காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வரும் விஜயகாந்த், ஒரு மணி நேரம் தாமதமாக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களுக்கு இடையில் தனது அறைக்கு சென்றார்.

இடம்: போயஸ் கார்டன்
நேரம்: 1.00 : விஜயகாந்த் நிச்சயம் வருவார் என தகவல் பரவியதால், ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் முன், இரு கட்சி தொண்டர்களும் அதிகளவில் திரண்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பகல்:1.30 : விஜயகாந்த் புறப்படாமல் தனது அறையில் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பகல்:2.30 : கட்சி அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த், தனது காரில் வெளியேறி விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். இதனால், தே.மு.தி.க., தொண்டர்கள் சோர்வடைந்தனர். அதே நேரத்தில், மாலை 4.30 மணிக்கு ஜெ., - விஜயகாந்த் சந்திப்பு நடக்கும் என்ற தகவல் பரவியது. இதனால், தொண்டர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்தனர்.

மாலை 4.00 : மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்ற விஜயகாந்த், மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டன் செல்லப்போகிறார் என்ற தகவல் வெளியானது. மாலை 5 மணி ஆகியும் அவர் செல்லவில்லை. இரவு 7.30 மணிக்கு செல்வார் என்றனர். அப்போதும் புறப்படவில்லை. மனு தாக்கல் முடிந்ததும், கட்சி நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்திய விஜயகாந்த், இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றார்.அதன்பின் திடீரென வீட்டிலிருந்து விஜயகாந்த் மற்றும் சுதீஷ் இருவரும் போயஸ் கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். சந்திப்பு குறித்து காலை முதல், நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு எகிறிய நிலையில், இரவில் பரபரப்பு முடிவுக்கு வந்தது.(dinamalar)

No comments:

Post a Comment