Tuesday, March 8, 2011

டில்லியில் நடந்த பரபரப்பு கிளைமாக்ஸ் காட்சிகள்


தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை அளிப்பது என முடிவே செய்து முடிக்கப்பட்டு, அதற்காக பிரதமர் அலுவலகத்தில் நேரம் ஒதுக்கப்பட்டு, தி.மு.க., அமைச்சர்கள், பிரதமர் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக தயார் நிலையில் இருந்தனர். தி.மு.க.,
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிவிடும் என்ற செய்தியும் உறுதிபடுத்தப்பட்ட நிலையில், கடைசி நேர திருப்பமாக, விரிசல் ஒட்ட வைக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டது. 63 தொகுதிகள் காங்கிரசுக்கு என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்போது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உடன் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி.மு.க., அமைச்சர்கள் ஆறு பேரும் டில்லியில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கே ராஜினாமா கடிதங்களை அளிக்க இருந்தனர். ஆனால், மாலையில் பிரதமர் நேரம் அளித்திருப்பதாக தி.மு.க., கூறியது. தி.மு.க., - காங்கிரஸ் இடையில் பலசுற்று பேச்சுவார்த்தையை தலைவர்கள் தொடங்கினர். மாலையில் முடிவு தெரியும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், மேலும் ஒருநாள் கால அவகாசம் காங்கிரஸ் கேட்டதாகவும், அதை ஏற்பதாகவும் தி.மு.க.,வே சென்னையிலிருந்து அறிவித்தது.

திங்களன்று இரவு சோனியாவின் இல்லத்திற்கு அழகிரியும் மற்றொரு தி.மு.க., அமைச்சரும் விரைந்தனர். ஆனால் அங்கு எதிர்பார்த்த வரவேற்பு இருந்த மாதிரி தெரியவில்லை. பொதுவாக ஒரு பிரச்னைக்காக யாரையாவது சோனியா சந்திக்கிறார் என்றால், இறுதி முடிவு எடுக்கப்படுவதாக மட்டுமே அர்த்தம். ஆனால், அன்றைய தின சந்திப்பின்போது, தங்களை சந்திக்க வந்த தி.மு.க., பிரதிநிதிகள் சந்திப்பின்போதுகூட சோனியாவின் பேச்சில் கடுமையும், காரசாரமும் நீடித்ததாக கூறப்படுகிறது. தவிர, பிரணாப் முகர்ஜியுடன் நடந்த மற்றொரு சந்திப்பின்போது, தன்னிச்சையாக தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றியது பற்றியும் காங்கிரஸ் தரப்பில் கடும் வருத்தம் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்தாக வேண்டுமென்றும் காங்கிரஸ் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையில் அழகிரி வீட்டில் தி.மு.க., அமைச்சர்கள் கூடினர். இருதரப்பும் பேச்சுவார்த்தை எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்த சமயத்தில், அழகிரியும் இன்னொரு அமைச்சரும், நார்த் பிளாக்கில் உள்ள பிரணாப் முகர்ஜி அலுவலகத்திற்கு விரைந்தனர். 10 நிமிடங்கள் மட்டுமே அந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்புக்கு பிறகு இரு தரப்பிலிருந்தும் எந்தவொரு சாதகமான அறிகுறிகளும் வெளியாகவில்லை. காங்கிரஸ் தரப்பில் கடுமையான இறுக்கம் நீடித்தபடி இருந்தது. அழகிரி இல்லத்தில் கூடியிருந்த தி.மு.க., அமைச்சர்கள் ஒவ்வொருவராக கிளம்பி அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

அதன்பிறகுதான், கூட்டணியில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், இனி பேசிப்பயனில்லை என்றும், ராஜினாமா கடிதங்களை தி.மு.க., அமைச்சர்கள், பிரதமரிடம் அளிக்க புறப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதை தி.மு.க., மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தரப்பு முக்கிய வட்டாரங்களுமே உறுதி செய்தன. அதற்கு ஏற்ப, பிரதமர் அலுவலகத்தில் விசாரித்தபோது தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் பிரதமரை சந்திப்பதற்காக 5.30 மணிக்கு நேரம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. பார்லிமென்டில் வைத்து பார்ப்பதா அல்லது வீட்டிலேயே பார்ப்பதா என்பது மட்டுமே உறுதி செய்யவேண்டியிருந்தது. ராஜ்யசபாவில் பிரதமர் முக்கிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. பார்லிமென்டில் நிருபர்களை சந்தித்த கனிமொழியும், "முட்டுக்கட்டை நீடிக்கிறது' என்றே கூறினார்.

எந்நேரமும் ராஜினாமா கடிதங்களை எடுத்துக் கொண்டு அழகிரி இல்லத்தில் இருந்து அமைச்சர்கள் புறப்படலாம் என்ற செய்தியால், அழகிரி இல்லம் மற்றும் பிரதமர் இல்லம் முன்பாக மீடியாக்கள் குவிய ஆரம்பித்தன. மாலை 5 மணி வரை இந்த நிலையே நீடித்துக் கொண்டிருந்த சமயத்தில், அழகிரி இல்லத்தில் இருந்து தி.மு.க., அமைச்சர் பார்லிமென்டுக்கு விரைந்தார். அங்கு பிரணாப் முகர்ஜி அலுலகத்திற்கு வந்து சேர்ந்த அவரிடம், அங்கு அகமது படேல்,பிரணாப் முகர்ஜி, இ.அகமது ஆகியோர் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் அந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் இடையிலேயே பிரணாப் முகர்ஜி வெளியில் கிளம்பிச் சென்றார். பின், இ.அகமதுவும் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.

அறைக்குள் இருந்த தி.மு.க., அமைச்சரும், அகமது படேலும் உள்வாயில் வழியாக வெளியே கிளம்பி மீடியாக்களை தவிர்த்துவிட்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வெளியேறுவதற்கு என்றே உள்ள வாயில் வழியாக ரகசியமாக கிளம்பிச் சென்றனர். பின், 6.40 மணிக்கு சோனியா இல்லத்திற்குள் காரில் நுழைந்த தி.மு.க., தரப்பு இரண்டொரு நிமிடங்களுக்குள் வெளியே வந்தது. அப்போது அழகிரி உடன் இருக்க குலாம்நபி ஆசாத், "காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்' என்றார். இந்த அறிவிப்பை ஆசாத் வெளியிட்டபோது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர்கூட உடன் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(dinamalar)

No comments:

Post a Comment