Friday, March 25, 2011

தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்: விஜயகாந்த் ஆவேசம்


 ""எகிப்தில் முபாரக்கிற்கு எதிராகவும்; லிபியாவில் கடாபிக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியை போல், தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும்,'' என, விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவலிங்கத்தை
ஆதரித்து அவர் பேசியதாவது: நான் கூட்டணி சேர்ந்தேன்; ஆனால் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. நீங்கள் என்ன கேட்டீர்கள் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும். நான் பேசினால் கோர்ட்டில் வழக்கு போடுவோம் என பயமுறுத்துகின்றனர். கோர்ட்டுக்கு அலைவது நான் கிடையாது. தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் ராஜா ஜெயிலில் கிடக்கிறார். தி.மு.க.,வின் கொள்கை ஜெயிலில் கிடக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால், செல்போன் ஊழல். நீரா ராடியாவை சி.பி.ஐ., விசாரிக்க, டில்லியில் உள்ள பண்ணை வீட்டுக்கு போகிறது. ராஜாவின் மனைவியை விசாரிக்க பெரம்பலூர் போகின்றனர். ஆனால், முதல்வர் வீட்டிற்கு சி.பி.ஐ., குழு வந்தால் அசிங்கமாகி விடுமாம். அதனால் அங்கே விசாரிக்காமல் அறிவாலயத்தின் மாடியில், கலைஞர் "டிவி' அலுவலகத்தில் விசாரிக்கின்றனர். கீழே ஐவர் குழு தொகுதி பிரிக்கிறது, மேலே குடும்பத்தை சி.பி.ஐ., விசாரிக்கிறது. இது என்ன கட்ட பஞ்சாயத்து.

எம்.ஜி.ஆர்., சொல்வதுண்டு, கருணாநிதி போடும் திட்டங்கள் எல்லாம் நன்றாக இருக்கும்; கடைசியில் அது அவரது குடும்பத்திற்கு போய் சேரும் என்பார். உணவு அமைச்சர் ஏமாற்றுக்கார வேலு சொல்லுகிறார்... எம்.ஜி.ஆர்., சத்தில்லாமல் சத்துணவு போட்டவராம். மக்களை மடையர்களாக நினைத்தால் மக்கள் உங்களை மடையர்களாக ஆக்கிவிடுவர். அது தான் தேர்தலில் வைக்கும் கருப்பு மை. உங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி இல்லை, கொள்ளையடிக்கும் கூட்டணி உங்களுடையது. நீங்கள் மக்களுக்கு நல்லது செய்திருந்தால் நான் ஏன் கட்சி ஆரம்பித்திருக்கப் போகிறேன். இலங்கை தமிழர்களை அழித்து, சுதந்திரமாக மீன் பிடிக்க முடியாமல் கச்ச தீவை தாரை வார்த்தவர்கள் காங்கிரசார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வருமானவரித்துறை ரெய்டு வரக்கூடாது என்பதற்காக கச்ச தீவை தாரை வார்த்தார்.

நான் தொப்புளில் பம்பரம் விட்டேன் என்கின்றனர். யார் தொப்புளில் விட்டேன்; கதாநாயகி தொப்புளில் தானே விட்டேன்; டைரக்டர் சொன்னார் செய்தேன். எதற்காக நான் பயப்பட வேண்டும். தேர்தல் வந்து விட்டது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பர். திருவண்ணாமலையில் தெய்வம் உள்ளது; அது நின்று கொல்லும். ஓட்டு போட்ட உங்கள் தேவைகளை நிறைவேற்ற தவறினால், நானாக இருந்தாலும் சட்டையை பிடியுங்கள். நாட்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களது சட்டையை பிடியுங்கள்.

எகிப்தில் முபாரக்கிற்கு எதிராகவும், லிபியாவில் கடாபிக்கு எதிராகவும் ஏற்பட்ட புரட்சியை போல், தமிழகத்திலும் புரட்சி வெடிக்கும். தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு போகும். தே.மு.தி.க., வேட்பாளர் செஞ்சி சிவாவுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கள். பக்கத்து தொகுதியில் நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments:

Post a Comment