Saturday, April 30, 2011

புலி வாலை பிடித்த தி.மு.க., : தப்ப வழி தெரியாமல் திணறல்


புலி வாலை பிடித்த கதையாக காங்கிரஸ் கூட்டணியில் சிக்கி கொண்ட தி.மு.க., "ஸ்பெக்ட்ரம்' என்ற வலையில் இருந்து தப்ப வழி தெரியாமல் திணறி வருகிறது.

இது, தமிழகத்தில், திராவிட கொள்கையில் ஈடுபாடு உள்ளவர்கள் மத்தியில்
கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "தோளில் கிடக்கும் துண்டு என்பது பதவிக்கு சமம். இடுப்பில் உள்ள வேஷ்டிதான் மானம். கொள்கைக்காக துண்டை உதறி போட்டு விட்டு போக தயங்கமாட்டோம். சுயமரியாதை, கொள்கைகளுக்காக வேஷ்டியை இழக்க மாட்டோம்' என தி.மு.க., பொதுக்கூட்டங்களில் பேச்சாளர்கள் ஆவேசமாக பேசுவார்கள். ஆனால், இன்று வேஷ்டி போனாலும் பரவாயில்லை, துண்டு பறி போய் விடக்கூடாது என்ற நிலையில் தி.மு.க., தத்தளிக்கிறது.

கட்சி துவங்கப்பட்டது முதல், இந்தி எதிர்ப்பு போராட்டம், எமர்ஜென்சி எதிர்ப்பு போராட்டம், விடுதலைப்புலிகள் ஆதரவு, சட்ட நகல் எரிப்பு என தடாலடி அரசியல் நடத்தி வந்த தி.மு.க., இன்று, குடும்ப அரசியலாலும், ஊழல் புகாரினாலும், கூட்டணியில் உள்ள கட்சியினரை கூட சமாளிக்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் உடனான உறவை துண்டிக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல், புலி வாலை பிடித்துக் கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து, பதவிக்காக இல்லாமல், திராவிட கொள்கையின் மீது கொண்ட ஈடுபாட்டால் அக்கட்சியில் நீடிக்கும் தி.மு.க.,வினர் கூறியதாவது: கடந்த 87ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டு வரை போபர்ஸ் ஊழல் பற்றி, அதிகம் பேசி வந்த கருணாநிதி, தற்போது நிருபர்கள் கேள்வி கேட்டும், "அந்த பழைய விவரங்களைப் பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை' என, பதில் அளித்துள்ளார். இதற்கான காரணம், மத்திய அமைச்சர் பதவிகளுக்காக காங்கிரசுடனான கூட்டணி தான். இப்படி, மத்தியில், அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து செயல்படுவதால், அதற்காக எங்கள் செயல்பாடுகளை முடக்கி கொண்டதால், தற்போது நாங்கள் தேவையின்றி, "தமிழின துரோகி' என்ற, அவல பேச்சிற்கு ஆளாகியுள்ளோம். இதே காங்கிரசால்தான், "நாங்கள் மெஜாரிட்டி பெறும் வகையில் போட்டியிடாத நிலையும், நாங்கள் வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும்' என்ற அவலமும் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கூட்டணியால்தான், இலங்கை தமிழர் பிரச்னையில் மட்டுமின்றி, நதிநீர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றில் எங்கள் நிலை, தர்மசங்கடமாகி விட்டது. இப்போது, "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்திலும், காங்கிரசுடனான உறவினால், நாங்கள் தடுமாற வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், என்றாவது ஒரு நாள், நாங்கள் காங்கிரசுடனான உறவை துண்டித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்து சேருவோம். அப்போது எங்கள் பேரும் கெட்டு போயிருக்கும். அதற்கு பதில், "ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்' என்ற இந்த தருணத்தை பயன்படுத்தியாவது நாங்கள் வெளியே வந்தால், நாளை போக உள்ள மத்திய அமைச்சர் பதவியை நாங்கள் இன்றே இழந்தாலும், நாங்கள் இழந்த பெயரை அது மீட்டுத் தர உதவும். இல்லையென்றால், தி.மு.க.,வின் நிலை, புலி வாலை பிடித்த கதையாக தொடரவே செய்யும். அது, தலைமையின் பெயரை கெடுத்து, கட்சியை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment