Saturday, April 30, 2011

கோல்கட்டா அணி கலக்கல் வெற்றி! * பஞ்சாப் அணி பரிதாபம்

ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்தலாக ஆடிய கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த 37வது லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப்

அணிகள் மோதின. "டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
வல்தாட்டி ஏமாற்றம்:பிற்பகலில் லேசாக மழை பெய்ததால், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது. இதன் காரணமாக, பஞ்சாப் அணி துவக்கத்திலேயே திணறியது. கடந்த போட்டிகளில் அதிரடி காட்டிய வல்தாட்டி, இம்முறை யூசுப் பதான் பந்தில் 7 ரன்களுக்கு வீழ்ந்தார். ஷான் மார்ஷ்(5) ரன் அவுட்டானார். பிரட் லீ ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த கேப்டன் கில்கிறிஸ்ட் அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர் 26 ரன்களுக்கு அப்துல்லா சுழலில் போல்டானார். அவசரப்பட்ட அபிஷேக் நாயர்(0) ரன் அவுட்டானார். இப்படி "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட, பஞ்சாப் அணி 9.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
கார்த்திக் ஆறுதல்:
பின் தினேஷ் கார்த்திக், டேவிட் ஹசி இணைந்து போராடினர். மீண்டும் பந்துவீச வந்த அப்துல்லா வலையில் ஹசி(15) சிக்கினார். ஒரு நாள் போட்டி போல படுமந்தமாக ஆடிய கார்த்திக்(42) ரன் அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பில்லாமல் போனது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டும் எடுத்தது. பிபுல் சர்மா(16), பிரவீண் குமார்(2) அவுட்டாகாமல் இருந்தனர்.
எளிதான வெற்றி:
சுலப இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி. பார்கவ் பட் சுழலில் காலிஸ்(1) அவுட்டானார். பின் காம்பிர், மார்கன் இணைந்து அசத்தலாக ஆடினர். பிரவீண், டேவிட் ஹசி ஓவர்களில் மார்கன் பவுண்டரிகளாக விளாசினார். இவர் 28 ரன்களுக்கு பார்கவ் பட் பந்தில் வெளியேறினார்.
அடுத்து வந்த மனோஜ் திவாரி கைகொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். இருவரும், பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்தனர். பியுஸ் சாவ்லா பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார் திவாரி. மறுபக்கம் சாவ்லா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய காம்பிர், அணிக்கு விரைவான வெற்றியை தேடி தந்தார். கோல்கட்டா அணி 17.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. காம்பிர்(45), திவாரி(34) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை அப்துல்லா வென்றார்.
---------
வந்தார் கங்குலி
நேற்றைய போட்டியை காண கோல்கட்டா அணியின் மாஜி கேப்டன் கங்குலி வந்தது வியப்பாக இருந்தது. இம்முறை வீரர்களுக்கான ஏலத்தில் கோல்கட்டா அணி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர், மிகுந்த விரக்தியில் இருந்தார். கோல்கட்டா அணி பங்கேற்கும் போட்டிகளை நேரில் காண வர மாட்டார் என கூறப்பட்டது. இதனை பொய்யாக்கும் விதமாக, ரசிகர்களுடன் சேர்ந்து போட்டியை உற்சாகமாக கண்டு களித்தார்.

No comments:

Post a Comment