Tuesday, May 24, 2011

கனிமொழி ஜாமீன் மனு: மே 30-க்கு ஒத்திவைப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழியின் ஜாமீன் மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

 சிபிஐ தரப்பில் எவரும் ஆஜராகாததால் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து மே 30-ம் தேதிக்கு நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.
 கனிமொழிக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கனிமொழி தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வந்தது.
 இந் நிலையில், அவரது சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 "சினியுக் நிறுவனத்திடம் இருந்து கடனாகத்தான் தொகை பெறப்பட்டது. அது லஞ்சப் பணம் அல்ல. அந்த கடனும் வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது. பணப் பரிமாற்றங்கள் அனைத்தும் வெளிப்படையாக நடந்துள்ளன.
 அதற்கான வரிகளும் செலுத்தப்பட்டுள்ளன. மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் தனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை" என்று தனது ஜாமீன் மனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
 கனிமொழி சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி வாதாடினார். ஆனால் சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
 இதையடுத்து நீதிபதி அஜித் பாரிகோக், கனிமொழிக்கு ஜாமீன் தரலாமா, வேண்டாமா என்பது குறித்து பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணை மே 30-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
 2ஜி வழக்கில் விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு அவர் உத்தரவிட்டார்

No comments:

Post a Comment