Tuesday, May 24, 2011

ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்


ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த "பிளே-ஆப்' போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுரேஷ் ரெய்னா, ஆல்பி மார்கலின் அதிரடி ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. பெங்களூரு சார்பில் விராத் கோஹ்லியின் ஆட்டம் வீணானது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில் நடந்த முதலாவது "பிளே-ஆப்' போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி "பீல்டிங்' தேர்வு செய்தார்.
கெய்ல் ஏமாற்றம்:பெங்களூரு அணிக்கு மயான்க் அகர்வால் நல்ல துவக்கம் தந்தார். ஆல்பி மார்கல் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். மார்கலின் அடுத்த ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் தனது வாணவேடிக்கையை துவக்கிய கெய்ல், அஷ்வின் சுழலில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் இவர் 8 ரன்களுக்கு வெளியேற, சென்னை ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். பிராவோ வேகத்தில் அகர்வால்(34) வீழ்ந்தார். ஜகாதி பந்தில் ஒரு சிக்சர் அடித்த டிவிலியர்ஸ்(11) அதே ஓவரில் அவுட்டாக, பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து தவித்தது.
பிராவோ சொதப்பல்:பின் விராத் கோஹ்லி, பாமர்ஸ்பாச் இணைந்து பொறுப்பாக ஆடினர். சென்னை பந்துவீச்சை ஒருகை பார்த்த இவர்கள் அதிரடியாக ரன் சேர்த்தனர். பிராவோ வீசிய போட்டியின் 15வது ஓவரில் பாமர்ஸ்பாச் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, மொத்தம் 17 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் பாமர்ஸ்பாச்சை(29), போல்டாக்கிய போலிஞ்சர் திருப்புமுனை ஏற்படுத்தினார்.
கோஹ்லி அரைசதம்:தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த கோஹ்லி, மார்கல் ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் அடித்து அரைசதம் கடந்தார். கடைசி 5 ஓவர்களில் 53 ரன்கள் எடுக்கப்பட்டன. பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி 70( 5 பவுண்டரி, 3 சிக்சர்), சவுரப் திவாரி(9) அவுட்டாகாமல் இருந்தனர்.
திணறல் துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு துவக்கத்திலேயே "அடி' விழுந்தது. ஜாகிர் வீசிய முதல் ஓவரில் மைக்கேல் ஹசி "டக்' அவுட்டானார். அரவிந்த் வீசிய அடுத்த ஓவரில் முரளி விஜய்(5) காலியானார். இதையடுத்து 2 விக்கெட்டுக்கு 7 ரன்கள் எடுத்து தத்தளித்தது. பின் பத்ரிநாத், சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர். மிதுன் பந்தில் பத்ரிநாத்(34) வீழ்ந்தார்.
தோனி அதிரடி:
அடுத்து வந்த கேப்டன் தோனி "கம்பெனி' கொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார் ரெய்னா. மிதுன் வீசிய போட்டியின் 13வது ஓவரில் ரெய்னா இரண்டு சிக்சர், தோனி ஒரு பவுண்டரி அடிக்க, 23 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்து ஜாகிர் ஓவரில் ரெய்னா 2 சிக்சர், தோனி ஒரு சிக்சர் அடிக்க 20 ரன்கள் கிடைத்தன. இந்த ஓவரில் தோனி(29) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், அடுத்து வந்த ஆல்பி மார்கலின் அதிரடி ஆட்டம் சென்னை அணிக்கு கைகொடுத்தது. அரவிந்த் வீசிய போட்டியின் 19வது ஓவரில் மார்கல் இரண்டு சிக்சர், ரெய்னா ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன்கள் கிடைத்தன.
6 பந்தில் 12 ரன்:கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் சென்னை அணிக்கு வெற்றி என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. அனுபவம் வாய்ந்த பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி பந்துவீசினார். முதல் பந்தில் ரெய்னா ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் மார்கல் ஒரு பவுண்டரி அடித்தார். 3வது பந்தில் 2 ரன். 4வது பந்தில் மார்கல் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, சென்னை அணி பைனலுக்குள் சூப்பராக நுழைந்தது. சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது. ரெய்னா(73), மார்கல்(28) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.



அஷ்வின் காயம்
நேற்று போட்டியின் 18வது ஓவரை வீசினார் சென்னை அணியின் அஷ்வின். கடைசி பந்தை மிகுந்த பலத்துடன் அடித்தார் பெங்களூரு அணி வீரர் சவுரப் திவாரி. அது நேராக அஷ்வின் நெற்றிப் பகுதியை தாக்கியது. வலியால் துடித்த இவர் உடனடியாக பெவிலியன் திரும்பினார். இவருக்கு "ஸ்கேன்' எடுத்து பார்க்கப்பட்டது. நல்லவேளை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிகிறது.
---------------
இன்னொரு வாய்ப்பு
நேற்று தோல்வி அடைந்த பெங்களூரு அணிக்கு பைனலுக்கு முன்னேற இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் போட்டியில்(மும்பை-கோல்கட்டா) வெற்றி பெறும் அணியுடன் வரும் 27ம் தேதி நடக்கும் "நாக்-அவுட்' போட்டியில் விளையாட வேண்டும். அதில் வெல்லும் பட்சத்தில் வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில் பங்கேற்கும் வாய்ப்பை பெங்களூரு அணி பெறலாம்.


ஸ்கோர் போர்டு
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்அகர்வால்(கே)போலிஞ்சர்(ப)பிராவோ 34(33)
கெய்ல் எல்.பி.டபிள்யு.,(ப)அஷ்வின் 8(9)
கோஹ்லி--அவுட் இல்லை- 70(44)
டிவிலியர்ஸ்(கே)விஜய்(ப)ஜகாதி 11(10)
பாமர்ஸ்பாச்(ப)போலிஞ்சர் 29(18)
திவாரி-அவுட் இல்லை- 9(6)
உதிரிகள் 14
மொத்தம்(20 ஓவரில் 4 விக்.,) 175
விக்கெட் வீழ்ச்சி: 1-30(கெய்ல்), 2-65(அகர்வால்), 3-85(டிவிலியர்ஸ்), 4-133(பாமர்ஸ்பாச்).
பந்துவீச்சு: மார்கல் 4-0-40-0, போலிஞ்சர் 4-0-20-1, அஷ்வின் 4-0-33-1, பிராவோ 3-0-28-1, ஜகாதி 4-0-37-1, ரெய்னா 1-0-8-0.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(4)
விஜய் எல்.பி.டபிள்யு.,(ப)அரவிந்த் 5(5)
ரெய்னா-அவுட் இல்லை- 73(50)
பத்ரிநாத்(கே)அரவிந்த்(ப)மிதுன் 34(32)
தோனி(கே)மிதுன்(ப)ஜாகிர் 29(19)
மார்கல்-அவுட் இல்லை- 28(10)
உதிரிகள் 8
மொத்தம்(19.4 ஓவரில் 4 விக்.,) 177
விக்கெட் வீழ்ச்சி: 1-3(ஹசி), 2-7(விஜய்), 3-70(பத்ரிநாத்), 4-131(தோனி).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-31-2, அரவிந்த் 3-0-32-1, மிதுன் 3-0-32-1, கோஹ்லி 2-0-19-0-, வெட்டோரி 3.4-0-42-0, கெய்ல் 4-0-19-0. 

No comments:

Post a Comment