Monday, May 2, 2011

ஸ்பின் 'பெண் வார்னே'





இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் புகழ்பெற்றது என்று சொல்லத் தேவையில்லை. ஆடவர் கிரிக்கெட்டைப் போலவே மகளிர் கிரிக்கெட்டும் இப்போது வேகமாக புகழ்பெற்று வருகிறது. இந்திய மகளிர் அணி பல்வேறு சர்வதேச போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி வருகிறது. தமிழகத்திலிருந்து ஏராளமான சர்வதேச வீராங்கனைகள் உருவாகியுள்ளனர். தற்போது வி. அபிநயா கிரிக்கெட்டில்  தமிழகத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறார்.
சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் எம்.ஏ மீடியா மேனேஜ்மென்ட் முதலாம் ஆண்டு படித்து வரும் இவர் நான்கு  ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழக அணிக்காக ஆடியுள்ளார். 19 வயதுக்குள்பட்டோர் தமிழக அணியில் ஓராண்டும், தமிழக மகளிர் சீனியர் அணியில் மூன்று ஆண்டுகளும் விளையாடியுள்ளார்.
பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் இவர் ஆர்வமாக இருக்கிறார். பௌலிங்கில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவைப் போல லெக் ஸ்பின்னராக வலம் வருகிறார். பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி விளாசுகிறார். கல்லூரியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருடன் பேசினோம்.


எந்த வயது முதல் கிரிக்கெட் ஆடி வருகிறீர்கள்? இதில் ஆர்வம் வந்தது எப்படி?
16 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறேன். அஹோபில மட பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை ஏவி.எம். ஆவிச்சி பள்ளியில் நடைபெற்ற கிரிக்கெட் முகாமுக்குச் சென்றேன். அங்கிருந்த பயிற்சியாளர்கள் என்னை அழைத்து டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆட சொல்லிக் கொடுத்தனர். அப்போது முதல் கிரிக்கெட் எனக்குள் வந்துவிட்டது. மேலும் எனது தந்தை வரதராஜன் விளையாட்டுப் பிரியர். அவருடைய ஊக்கத்தாலும் கிரிக்கெட் கற்றுக்கொண்டேன். 18 வயது முதல் சென்னை பல்கலைக்கழக அணிக்காக விளையாடி வருகிறேன். சென்னை பல்கலைக்கழக அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளேன். இதே காலகட்டத்தில் 19 வயதுக்குள்பட்டோர் தமிழக அணிக்காகவும், தமிழக சீனியர் அணிக்காகவும் விளையாடியுள்ளேன்.
கிரிக்கெட்டைக் கற்றுக்கொள்ள எந்த வயது சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
12 வயது முதல் கிரிக்கெட் கற்றுக்கொள்ளலாம். இதை திறம்படக் கற்றுக்கொள்ள இந்த வயது உகந்ததாக இருக்கும்.
கிரிக்கெட்டில் நீங்கள் பெற்ற வெற்றிகள்...?
2010-ல் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று 3-வது இடத்தைப் பிடித்தோம். அகில இந்திய அளவில் நடந்த போட்டியில் தமிழகம் 2-வது இடம் பிடித்தது. இதே ஆண்டில் கர்நாடக அணியுடன் நடந்த தென் மண்டல அளவிலான போட்டியில் வெற்றி கண்டோம். கர்நாடகத்துடனான டி20 போட்டியிலும் நான் இடம்பெற்றிருந்த தமிழக அணி வெற்றி வாகை சூடியது. இதுபோலவே சென்னை பல்கலைக்கழக அணியின் சார்பில் பங்கேற்ற போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளோம்.
நீங்கள் பங்கேற்ற போட்டிகளில் குறிப்பிடத்தகுந்த, சிறந்த பந்துவீச்சாக எதைச் சொல்லலாம்?
கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில், 6 ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையும், தென் மண்டல போட்டியில் கேரள அணியுடனான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதையும் சிறந்த பந்துவீச்சாக கூறலாம்.
உங்களுடைய பயிற்சி நேரம்...?
காலையில் மூன்று மணி நேரம், மாலையில் மூன்று மணி நேரம் எனப் பயிற்சி செய்வோம். விடுமுறை நாள்களில் பயிற்சி நேரம் அதிகரிக்கும்.
பயிற்சியாளர்கள் யார்?
பள்ளி அளவில் விளையாடும்போது முரளி கிருஷ்ணா என்பவர் பயிற்சியளித்தார். இப்போது கல்லூரி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பி.வி. ரமேஷ், பயிற்சி அளித்து வருகிறார். தமிழக அணியில் விளையாடும்போது புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான வி.வி. குமார் பயிற்சி அளிக்கிறார். என்னுடைய ஆட்டத்தைப் பார்த்து, சிறப்பாக விளையாடுகிறாய் என்று அவர் புகழாரம் சூட்டினார். அதை மறக்கவே முடியாது.
கிரிக்கெட்டில் உங்கள் ரோல்மாடல் யார்யார்?
ஆடவரில் ரோல் மாடல் சச்சின். எம்.எஸ். தோனி பிடிக்கும். இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் மிகவும் பிடிக்கும்.
உங்கள் விளையாட்டுக்கு ஊக்கமாக இருப்பது...?
எனது தந்தை வரதராஜன், தாய் ரேவதி, மாமா ஆராவமுதன் ஆகியோர் ஊக்கம் அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எங்கள் கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத், உடற்கல்வி இயக்குநர் அமுதா, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பி.வி. ரமேஷ் ஆகியோர் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றனர். எனது விளையாட்டுத் திறனைப் பார்த்து எனக்கு இலவசக் கல்வியை வழங்குமாறு முதல்வர் நிர்மலா பிரசாத் உத்தரவிட்டுள்ளார்
.

No comments:

Post a Comment