Tuesday, May 3, 2011

கோல்கட்டா அணி "ஹாட்ரிக்' வெற்றி *டெக்கான் மீண்டும் பரிதாபம்

 ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, "ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தியது.
நான்காவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடக்கிறது. இதில் நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில், காம்பிரின் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, சங்ககராவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டெக்கான் கேப்டன் சங்ககரா, பீல்டிங் தேர்வு செய்தார்.
காம்பிர் அதிரடி:
கோல்கட்டா அணிக்கு காலிஸ், மார்கன் துவக்கம் கொடுத்தனர். கிறிஸ்டியன் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து அதிரடியை துவக்கிய மார்கன் (14) நிலைக்கவில்லை. இஷாந்த் சர்மா ஓவரில் 2 பவுண்டரி அடித்த,

காலிஸ் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். துவக்கத்தில் இருந்தே அதிரடியில் அசத்திய, கேப்டன் காம்பிர் (22 பந்து, 35 ரன்கள்) அடுத்த சில நிமிடத்தில் திரும்பினார்.
யூசுப் அபாரம்:
இதன் பின் யூசுப் பதான், மனோஜ் திவாரி ஜோடி, ஆட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது. இருவரும் மாறி, மாறி பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அனுப்ப, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதற்கு வசதியாக டெக்கான் அணியின் பீல்டிங்கும் மோசமாக இருந்தது.
மூன்று முறை "கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய யூசுப் பதான், பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா பந்துகளில் சிக்சர்கள் விளாசினார். இஷாந்த் சர்மாவையும் விட்டுவைக்காத யூசுப் பதான், இவரது பந்தில் "சூப்பர்' சிக்சர் அடித்து அசத்தினார். மறுமுனையில் மனோஜ் திவாரி 33 ரன்கள் எடுத்தார். 20 ஓவரின் முடிவில் கோல்கட்டா அணி, 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் (47) அவுட்டாகாமல் இருந்தார்.
இக்பால் அசத்தல்:
சற்று கடின இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சன்னி சோகல், சிகர் தவான் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பாலாஜி ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சோகல் (26), இக்பால் அப்துல்லாவின் சுழலில் சிக்கினார். இதே ஓவரில் கேப்டன் சங்ககராவும், "டக்' அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது.
மீண்டும் சரிவு:
இந்நிலையில் சிகர் தவானுடன் காமிரான் ஒயிட் ஜோடி சேர்ந்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காமிரான் ஒயிட்டை (13), ரஜத் பட்டியா தனது முதல் பந்தில் போல்டாக்கினார். "அதிரடி' கிறிஸ்டியனையும் (1), ஐந்தாவது பந்தில் பெவிலியன் திருப்பி அனுப்ப, 70 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து, டெக்கான் திணறியது.
தவான் ஆறுதல்:
ஒருமுனையில் விக்கெட் சரிந்த போதும், சிகர் தவான் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாலாஜி பந்தில் பவுண்டரி அடித்த இவர், அரைசதம் கடந்தார். சற்று தாக்குப்பிடித்த ரவி தேஜா (30), பிரட் லீ வேகத்தில் வீழ்ந்தார். போராடிய சிகர் தவானும் (54) காலிஸ் பந்தில் போல்டாக, டெக்கான் அணியின் தோல்வி உறுதியானது. கடைசி நேரத்தில் பரத் சிப்லி (12*), அமித் மிஸ்ரா (9*) போராட்டம் வீணானது.
டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கோல்கட்டா அணியின் இக்பால் அப்துல்லா, ரஜத் பட்டியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


ஸ்கோர்போர்டு
கோல்கட்டா நைட்ரைடர்ஸ்
மார்கன்(ப)கிறிஸ்டியன்    14(15)
காலிஸ்(கே)ரவிதேஜா(ப)மிஸ்ரா    30(31)
காம்பிர்(கே)சங்ககரா(ப)ஓஜா    35(22)
யூசுப்-அவுட் இல்லை-    47(26)
திவாரி(கே)சிகர் தவான்(ப)ஸ்டைன்    33(28)
பவுச்சர்-அவுட் இல்லை-    0(0)
உதிரிகள்    10
மொத்தம் (20 ஓவரில், 4 விக்.,)    169
விக்கெட் வீழ்ச்சி: 1-36(மார்கன்), 2-79(காலிஸ்), 3-84(காம்பிர்), 4-164(திவாரி).
பந்து வீச்சு: கிறிஸ்டியன் 4-0-39-1, ஸ்டைன் 4-0-31-0, இஷாந்த் சர்மா 4-0-37-0, சிகர் தவான் 1-0-4-0, பிரக்யான் ஓஜா 4-0-32-1, அமித் மிஸ்ரா 3-0-22-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
சோகல்(கே)மார்கன்(ப)இக்பால்    26(20)
தவான்(ப)காலிஸ்    54(45)
சங்ககரா(கே)காலிஸ்(ப)இக்பால்    0(2)
காமிரான்(ப)பட்டியா    13(13)
கிறிஸ்டியன்-எல்.பி.டபிள்யு(ப)பட்டியா    1(3)
ரவிதேஜா(ப)பிரட் லீ    30(23)
சிப்லி-அவுட் இல்லை-    12(7)
மிஸ்ரா-அவுட் இல்லை-    9(9)
உதிரிகள்    4
மொத்தம் (20 ஓவரில் 6 விக்.,)    149
விக்கெட் வீழ்ச்சி: 1-41(சோகல்), 2-41(சங்ககரா), 3-68(காமிரான்), 4-70(கிறிஸ்டியன்), 5-126(ரவி தேஜா), 6-128(சிகர் தவான்).
பந்து வீச்சு: பிரட் லீ 4-0-30-1, பாலாஜி 3-0-27-0, இக்பால் அப்துல்லா 4-0-34-2, ரஜத் பட்டியா 4-0-26-2, யூசுப் பதான் 3-0-19-0, காலிஸ் 2-0-12-1.

No comments:

Post a Comment