Sunday, May 22, 2011

மும்பை அணிக்கு "திரில்' வெற்றி!* கடைசி பந்தில் ராயுடு "சிக்சர்' * கோல்கட்டா பரிதாபம்


ஐ.பி.எல்., பரபரப்பான லீக் போட்டியில் கடைசி பந்தில் அம்பதி ராயுடு சிக்சர் விளாச, மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 23 ரன்களை வாரி வழங்கிய பாலாஜி கோல்கட்டா அணிக்கு "வில்லனாக' மாறினார். இவ்வெற்றியின் மூலம் மும்பை
அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது. கோல்கட்டா அணி நான்காவது இடமே பெற முடிந்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்.,"டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த கடைசி லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே "பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி விட்டன. "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் சச்சின் "பீல்டிங்' தேர்வு செய்தார்.
துவக்கம் மோசம்:கோல்கட்டா அணி துவக்கத்தில் தடுமாறியது. கோஸ்வாமி(1) ரன் அவுட்டானார். அகமது ஓவரில் ஒரு சிக்சர் அடித்த கேப்டன் காம்பிர்(8) அடுத்த பந்தில் போல்டானார். இதையடுத்து 2 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தவித்தது. பின் காலிஸ், மனோஜ் திவாரி இணைந்து அசத்தினர். பிரைஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பிய திவாரி(35), ரன் அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் அதிரடியாக ரன் சேர்த்தார். பிரைஸ் பந்தில் ஒரு இமாலய சிக்சர் விளாசிய இவர், போலார்டு ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். பிராங்க்ளின் வேகத்தில் யூசுப்(36) வீழ்ந்தார்.
காலிஸ் அரைசதம்:தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த காலிஸ், ஹர்பஜன் சுழலில் ஒரு "சூப்பர்' சிக்சர் அடித்தார். பின் பிராங்க்ளின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்த இவர், அரைசதம் கடந்தார். காலிஸ் 59 ரன்களுக்கு(4 பவுண்டரி, 3 சிக்சர்) பிராங்க்ளின் பந்தில் அவுட்டானார். மலிங்கா பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட டசாட்டே, ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். அகமது வீசிய கடைசி ஓவரில் டசாட்டே(18) வெளியேறினார். இதே ஓவரில் 2 பவுண்டரி அடித்த பாட்யா(11) ரன் அவுட்டானார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு, பிரட் லீ வீசிய முதல் ஓவர் சாதகமாக அமைந்தது. சுமன் ஒரு பவுண்டரி, சச்சின் இரண்டு பவுண்டரி அடிக்க, 13 ரன்கள் கிடைத்தன. அப்துல்லா சுழலில் சுமன்(4) அவுட்டானார். ஸ்கோரை உயர்த்தும் நோக்கில் "ஒன்-டவுனாக' களமிறக்கப்பட்ட ஹர்பஜன் தனது பணியை கச்சிதமாக செய்தார். பிரட் லீ, பாலாஜி வேகத்தில் பவுண்டரிகளாக விளாசினார். மறுபக்கம் சச்சினும் பொறுப்பாக ஆட, ஸ்கோர் சீராக உயர்ந்தது.
பாட்யா அசத்தல்:
இந்த நேரத்தில் ரஜத் பாட்யா திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது முதல் ஓவரில் ஹர்பஜன்(30) சிக்கினார். அடுத்த ஓவரில் ரோகித் சர்மாவை(10) வெளியேற்றினார். தனது 3வது ஓவரில் சச்சினை(38) அவுட்டாக்கிய பாட்யா, மும்பை அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தார்.
பின் போலார்டு, பிராங்க்ளின் சேர்ந்து போராடினர். அப்துல்லா ஓவரில் பிராங்க்ளின் ஒரு சிக்சர், போலார்டு ஒரு பவுண்டரி அடித்தனர். மீண்டும் பந்துவீச வந்த பாலாஜி வேகத்தில் போலார்டு(18) போல்டானார்.
"வில்லன்' பாலாஜி: கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை மும்பை அணிக்கு ஏற்பட்டது. பாலாஜி சொதப்பலாக பந்துவீசினார். முதல் நான்கு பந்துகளில் பிராங்க்ளின் வரிசையாக நான்கு பவுண்டரிகள் விளாச, "டென்ஷன்' எகிறியது. 5வது பந்தில் ஒரு ரன். 6வது பந்தில் நான்கு ரன்கள் தேவைப்பட்டன. இம்முறை அம்பதி ராயுடு ஒரு இமாலய சிக்சர் விளாச, ஈடன் கார்டன் மைதானத்தில் திரண்டிருந்த 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோல்கட்டா ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. "ஹீரோவாக' ஜொலித்த பிராங்க்ளின்(45), ராயுடு(17) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை பிராங்க்ளின் தட்டிச் சென்றார்.


ஸ்கோர் போர்டு
கோல்கட்டா நைட் ரைடர்ஸ்

காலிஸ்(கே)சுமன்(ப)பிராங்க்ளின் 59(42)
கோஸ்வாமி-ரன் அவுட்(சுமன்/ராயுடு) 1(3)
காம்பிர்(ப)அகமது 8(7)
திவாரி-ரன் அவுட்(ஹர்பஜன்) 35(22)
யூசுப்(கே)அகமது(ப)பிராங்க்ளின் 36(27)
டசாட்டே எல்.பி.டபிள்யு.,(ப)அகமது 18(12)
பாட்யா-ரன் அவுட்-(ராயுடு) 11(6)
சாகிப்-அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 6
மொத்தம்(20 ஓவரில் 7 விக்.,) 175
விக்கெட் வீழ்ச்சி: 1-4(கோஸ்வாமி), 2-22(காம்பிர்), 3-67(திவாரி), 4-124(யூசுப்), 5-149(காலிஸ்), 6-166(டசாட்டே), 7-175(பாட்யா).
பந்துவீச்சு: அகமது 4-0-32-2, மலிங்கா 4-0-23-0, ஹர்பஜன் 3-0-26-0, பிரைஸ் 3-0-33-0, போலார்டு 2-0-23-0, பிராங்க்ளின் 4-0-35-2.
மும்பை இந்தியன்ஸ்
சுமன்(கே)யூசுப்(ப)அப்துல்லா 4(4)
சச்சின்(கே)காம்பிர்(ப)பாட்யா 38(27)
ஹர்பஜன்(கே)திவாரி(ப)பாட்யா 30(29)
ரோகித்(கே)கோஸ்வாமி(ப)பாட்யா 10(9)
போலார்டு(ப)பாலாஜி 18(22)
பிராங்க்ளின்-அவுட் இல்லை- 45(23)
ராயுடு-அவுட் இல்லை- 17(6)
உதிரிகள் 16
மொத்தம்(20 ஓவரில் 5 விக்.,) 178
விக்கெட் வீழ்ச்சி: 1-13(சுமன்), 2-70(ஹர்பஜன்), 3-85(ரோகித்), 4-96(சச்சின்), 5-137(போலார்டு).
பந்துவீச்சு: பிரட் லீ 4-0-37-0, அப்துல்லா 4-0-26-1, சாகிப் 4-0-26-0, பாலாஜி 3-0-51-1, யூசுப் 1-0-7-0, பாட்யா 4-0-22-3.

No comments:

Post a Comment