Friday, May 20, 2011

கனிமொழி கைது, திகார் சிறையில் அடைப்பு

2ஜி முறைகேடு வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.


மதியம் 2.30 மணியளவில் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் அங்கிருந்து 3.30 மணியளவில் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெண் என்பதால் தனி வேனிலும், சரத் குமார் ஒரு வேனிலும் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறையில் கனிமொழிக்கு பெண்களுக்கான தனி அறை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டது. கனிமொழிக்கு வீட்டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனிமொழி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக தன் மகன் ஆதித்யா மற்றும் கணவர் அரவிந்தனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

மீண்டும் நாளை காலை 10 மணிக்கு அவர் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதன்பிறகு நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று மதியம் தீர்ப்பு வழங்குவார் என்று கூறப்பட்டது. இதில், கனிமொழிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

முன்னதாக, 2ஜி முறைகேட்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று குற்றம் சாட்டிய சிபிஐ, கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோரது பெயர்களை இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்த்தது.

இந்த வழக்கில் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து மே 6-ம் தேதி நடந்த விசாரணையில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அவர் வாதாடினார். அதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கனிமொழி சென்னை வருமான வரி அலுவலகத்தில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜரான பிறகு, மே 13-ம் தேதி இரவு விமானம் மூலம் தில்லி வந்தார்.

கனிமொழி மனு மீதான விசாரணையில், அவருக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து மே 14-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது மனு மீதான தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, இன்று வழங்குவதாக அறிவித்தார்.

No comments:

Post a Comment