Saturday, May 7, 2011

கேள்விக்குறியாகும் கனிமொழியின் அரசியல் எதிர்காலம்?


தேசிய அரசியலில் பெண் தலைவர்களுக்கு இந்தியாவில் எப்போதும் பற்றாக்குறையே. அதுவும் மாநிலக் கட்சிகளிலிருந்து தேசிய அரசியலுக்கு வரும் பெண் தலைவர்கள் அரிது.

தமிழகத்திலிருந்து தேசிய அரசியலில் பங்கெடுத்த பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தி.மு.க.,வில் எம்.பி.,யாகி டில்லி செல்பவர்களே தேசிய அரசியலில் தி.மு.க.,வின் சார்பில் பங்கு பெறுவார்கள். அந்த வாய்ப்பு கனிமொழிக்கு கிடைத்தது. அவர், எம்.பி., என்ற அளவில் மட்டுமல்ல, தி.மு.க., தலைவர்
மற்றும் தமிழகத்தின் முதல்வர் கருணாநிதியின் மகள் என்பதால், கூடுதல் தகுதிகளைப் பெற்றவர். அவருக்குக் கிடைத்த வாய்ப்பின் மூலம், கட்சியின் நிலையை டில்லியில் நிலைப்படுத்துவதோடு, தேசிய அளவில் தி.மு.க.,வுக்கு ஒரு தலைவராக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. கட்சியிலிருந்து, டில்லிக்கு அனுப்பப்படும் ஒருவர், கட்சி சொல்லும் கருத்துக்களை பிரதிபலிக்கக் கூடியவராக இருப்பார். டில்லியில் நிலவும் சூழலுக்கு ஏற்ப அவரால் உடனடியாக பிரதிபலிக்க முடியாது. கட்சியின் கருத்தைக் கேட்டு தான் அவரால் செயல்பட முடியும். ஆனால், கட்சித் தலைவர் குடும்பத்திலிருந்து சென்ற கனிமொழிக்கு இந்த சங்கடம் இல்லை. அவரால், உடனடியாக செயல்பட்டு, பின்னர் கட்சியின் அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். பல நேரங்களில், கட்சியின் நிலையைக் கூட அவரே உருவாக்கும் அதிகாரமும் பெற்றவர்.

இந்த சிறப்பு அம்சங்களைக் கொண்ட கனிமொழி டில்லியில் ஜொலிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், "ஸ்பெக்ட்ரம்' விவாகரம் இந்த எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கிவிட்டது. வழக்கின் பின் விளைவுகள், அரசியலில் கடும் பாதிப்புகளை அவருக்கு ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் தி.மு.க.,வின் மதிப்பை டில்லியில் குறைத்துவிட்டது. கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், இப் பிரச்னையில் விலகியே நிற்கிறது காங்கிரஸ். அரசில் அங்கம் வகிக்கும் கட்சி தி.மு.க., என்றாலும் கூட, ஒட்டுமொத்த பொறுப்பு உள்ளதாக காங்கிரஸ் கருதவில்லை.

இந்நிலையில், கனிமொழிக்கான நெருக்கடிகள் அதிகமாகவே இருக்கின்றன. "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்திலிருந்து காப்பாற்றுவதற்கு தந்தை என்ற முறையில், கருணாநிதி உதவிகளை செய்யலாம். ஆனால், கட்சி என்று வரும்போது, அவரால் ஒன்றும் செய்ய முடியாது என தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகிறார். "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் டில்லி சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் மனுவை கனிமொழி தாக்கல் செய்துள்ளார். இனி, குற்றப்பத்திரிகை நகல், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் மனு, விசாரணை, எதிர்மனு, மேல்முறையீடு என விசாரணைக் காலம் நீண்டு கொண்டே இருக்கும். இந்த பிரச்னையில் அழகிரி, ஸ்டாலின் மற்றும் தி.மு.க.,வினர் அரசியல் ரீதியாக எடுக்கும் நிலை கூட கனிமொழிக்கு எதிராகவே இருக்கும்.

ஸ்பெக்ட்ரம் பிரச்னையிலிருந்து தி.மு.க., மீளுவதற்கு இன்னும் சில காலம் ஆகும். அதுவரை, கனிமொழியின் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், வழக்கிலிருந்து விடுபடுவதற்கான உதவிகள் மட்டுமே கட்சியிலிருந்து அவருக்குக் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். இளம் வயதில் எம்.பி.,யாகும் வாய்ப்பு கனிமொழிக்குக் கிடைத்தது. பெண் என்பதால், கூடுதல் ஆதரவும் அவருக்கு இருந்தது. கருணாநிதியின் வாரிசுகளில், ஆங்கில மொழியறிவு பெற்றவர் என்பதால், டில்லியில் சுயமாக செயல்படும் ஆற்றலும் பெற்றிருந்தார். இந்தத் சிறப்பம்சங்கள் அனைத்தையும், "ஸ்பெக்ட்ரம்' என்ற சுனாமி தூக்கி சாப்பிட்டு, கனிமொழியை அரசியலில் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவே மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். குடும்பத்தின் பல அதிகார மையங்களின் ஆளுமைக்கு மத்தியில் கட்சி உள்ள நிலையில், அவர் மீண்டு வருவதற்கு பல தடைக் கற்கள் உள்ளன. அவரை முன்னிலைப் படுத்துவதில் கட்சித் தலைமையே தயக்கம் காட்டும் நிலை கூட வரலாம். கனிமொழியின் அரசியல் எதிர்காலம் இப்போதைக்கு இருட்டாக உள்ளது என மூத்த கட்சியினர் கணிக்கின்றனர்.(dinamalar)

No comments:

Post a Comment