Friday, May 20, 2011

காங்கிரஸ்- திமுக உறவில் முறிவா?

 காங்கிரஸ் கட்சியுடனான உறவு பற்றி பொதுக்குழு கூடித்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி தில்லியில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கருணாநிதியின் சி.ஐ.டி.நகர் வீட்டில் திமுக நிர்வாகிகள் ஆலோசித்தனர். பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு உள்பட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி: கனிமொழியின் ஜாமீன் மனுவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நீதிமன்ற விவகாரமாகும். அதில் நான் ஒன்றும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
 தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு: இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பேன். அது என்ன முடிவு என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
 காங்கிரஸýடன் திமுக உறவு: எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது. திமுக என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவும் எடுக்க முடியாது. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தைத் தேவைப்படும்போது கூட்டுவோம் என்றார் கருணாநிதி.
 உங்கள் மனம் என்ன பாடுபடும்? "கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?' என்று நிருபர் கேட்டார். "உங்களுக்கு ஒரு மகள் இருந்து - அவர் செய்யாத குற்றத்திற்காக - இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில்தான் என் மனம் இருக்கிறது' என்றார் கருணாநிதி.
 தில்லிக்கு போகவில்லை: இப்போதைக்கு தில்லிக்கு நான் போகவில்லை என்றும் கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment