Friday, May 20, 2011

கனிமொழியைக் காண ராசாத்தி அம்மாள் விரைந்தார்-கருணாநிதியும் செல்கிறார்

 திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ள திமுக முன்னணித் தலைவர்கள் கருணாநிதி வீட்டில் குவிந்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், தனது மகள் கனிமொழியை திஹார் சிறையில் பார்ப்பதற்காக தாயார் ராசாத்தி அம்மாள் டெல்லி விரைந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியும் நாளை

காலை டெல்லி செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக கனிமொழி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக முன்னணித் தலைவர்கள் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் வீட்டில் குவிந்தனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினர்.

கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கு மேலும் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை என்ற எண்ணத்தில் திமுகவினர் உள்ளனர். விரைவில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர்கள், கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கனிமொழி கைது குறித்து இதுவரை திமுக சார்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. பெரும் அமைதியும், இறுக்கமான சூழ்நிலையும் காணப்படுகிறது.

திமுக எம்.பியான டி.கே.எஸ். இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு அவர் கோபமாக சென்று விட்டார். பதிலளிக்க மறுத்து விட்டார்.

இந்த இறுக்கமான சூழலில் தனது மகளைப் பார்ப்பதற்காக கருணாநிதி நாளை டெல்லி செல்கிறார். முன்னதாக இன்று மாலையில் ராசாத்தி அம்மாள் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
   

No comments:

Post a Comment