Friday, May 6, 2011

ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம்

 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று வரை ஜாமீன் கோர மாட்டேன் என்று கூறி வந்த திமுக எம்பி கனிமொழி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானபோது அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவருக்கு முன் ஜாமீன்
கோரி வாதாடினார்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் அந்தத் தொலைக்காட்சிக்கு ரூ. 124 கோடியை ஸ்வான் டெலிகாம் தந்த வழக்கில் கனிமொழி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

கனிமொழி சார்பாக பிரபல கிரிமினல் வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவீதம் பங்குகள் தான் உள்ளன.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை கவனிப்பதில்லை. அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை.

நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் சரத் குமாரே கவனித்து வருகிறார். கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இப்போது அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.

கனிமொழி கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்பதற்காகவே அவரை குற்றவாளி என்று கூறி விட முடியாது.

ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது எல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான். அவர் தான் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. அதில் கனிமொழி தலையிடவே இல்லை.

கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித்துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

அதே போல சரத்குமாரும் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்காக வழக்கறிஞர் அல்தாப் அகமத் வாதாடினார்.

ஜாமீன் வழங்க சிபிஐ ஆட்சேபம்:

ஆனால், இந்த இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம் தெரிவித்தார்.

தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் தொடர்ந்ததால் வழக்கு விசாரணையை நீதிபதி சைனி நாளைக்கு ஒத்தி வைத்தார்.

இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த கனிமொழி நிருபர்களை தவிர்த்து விட்டு தனது கணவருடன் வேகமாக காரில் புறப்பட்டுச் சென்றார்.

அங்கிருந்த திமுக செய்தி தொடர்பாளரும் எம்பியுமான இளங்கோவன் நிருபர்களிடம், திமுக எப்போதும் கனிமொழிக்கு ஆதரவாக துணை நிற்கும் என்றார்.

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த திமுக எம்பி:

முன்னதாக வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அங்கிருந்த இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment