Wednesday, June 1, 2011

பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல்


 ரிஷிவந்தியத்தில், நன்றி தெரிவிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாகனத்தை வழிமறித்து, பொதுமக்கள் பிரச்னை செய்த சம்பவத்தால், கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவருக்கான அரசு சார்பில் வழங்கப்படும் கூடுதல் பாதுகாப்பை அவர் ஏற்க வேண்டும் என, தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், தமிழக சட்டசபை பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். விஜயகாந்த், தொகுதி மக்களுக்கு, கடந்த மூன்று நாட்களாக, நன்றி தெரிவிக்க, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மூன்று நாட்களில், 120 கிராமங்களுக்கு மேல் நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சில இடங்களில் அவரது வேனின் மேற்புறம் நின்றும், பல இடங்களில் வேனுக்குள் அமர்ந்தபடியும் பேசினார். வேனுக்குள் அமர்ந்தபடி பேசிய இடங்களில், பொதுமக்களால் அவரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால், சில இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரே கிராமத்தில் இரண்டு மூன்று இடங்களில் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததால், அவர்களை தவிர்க்காமல், சிறிது நேரம் நின்று பேசிவிட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 9.30 மணிக்கு, ரிஷிவந்தியத்திற்கு விஜயகாந்த் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு செல்ல முடியவில்லை. இரவு, 10.40 மணிக்கு, விஜயகாந்த், ரிஷிவந்தியம் சென்றார். பல இடங்களில் சுற்றி பயணம் செய்து தொடர்ந்து பேசியதால், மிகவும் களைப்புடன் காணப்பட்ட அவர், பஸ் நிறுத்தத்தில் வேனில் அமர்ந்தபடி ஒரு சில நிமிடங்களில் நன்றி தெரிவித்து பேச்சை முடித்துக் கொண்டார். அங்கு திரண்டிருந்த மக்கள், அவரிடம் மனுக்களை கொடுக்க முண்டியடித்தபடி வேனுக்கு அருகில் சென்றனர். அதைபார்த்த அவர், மனுக்களை வேனுக்கு அருகில் நிற்கும் தனது மெய்க்காப்பாளர்களிடம் வழங்கும் படியும், அதை பார்த்து நடவடிக்கை எடுப்படும் என்று கூறியதை கேட்காததால், "தள்ளு முள்ளு' ஏற்பட்டது. இதற்குள் விஜயகாந்த் வாகனம் புறப்பட்டு ரிஷிவந்தியம் காலனிக்கு சென்றது. அவருக்கு பின்னால் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்களில் சிலர், ரகளையில் ஈடுபட்டனர். கல்லால் அடித்ததில் இரு கார்களின் கண்ணாடி உடைந்தது. அதற்குள், காலனியில் பேசிவிட்டு அதே வழியாக திருக்கோவிலூர் செல்ல, விஜயகாந்த் வந்தார். அப்போது, வேனின் உள்ளே அவர் உட்கார்ந்தார்.

அவரது வேனை மீண்டும் மறித்த மக்கள், ரிஷிவந்தியத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டுவதாக உறுதியளித்தால் தான் அங்கிருந்து செல்ல வழிவிடுவோம் என கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார், அவரது வாகனத்திற்கு மட்டும் வழி ஏற்படுத்தி, 11.55 மணிக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும், வேனின் இருபுறமும் கைகளால் வேகமாக சிலர் ஆவேசமாக தாக்கினர். இந்நிலையில், நேற்று காலை, 8.10 மணிக்கு, மீண்டும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், தன் மனைவி பிரேமலதாவுடன் சாமிகும்பிட விஜயகாந்த் வந்தார். அவர் வரும் வரை, எந்த போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. விஜயகாந்த் வந்ததும், போலீசார், பொதுமக்களை கோவிலுக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். முதல் நாள் இரவு நடந்த சம்பவத்தின் பாதிப்பு எதுவும் இன்றி, அமைதியாக சாமி கும்பிட்டு விட்டு, 9.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தன் பாதுகாப்பு குறித்து அக்கறை எடுத்துக்கொள்ளாமல், மிக இயல்பாக செயல்படும் விஜயகாந்தின் நடவடிக்கைகள், அக்கட்சி நிர்வாகிகளை மிரள வைத்துள்ளது. தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்த பின்னரும், பழைய நிலைபோலவே, போதிய பாதுகாப்பு இன்றி, மக்களை சந்திக்க செல்வதை, தங்கள் தலைவர் தவிர்க்க வேண்டும் என, கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர்.

1 comment:

  1. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_05.html

    ReplyDelete