Tuesday, May 31, 2011

மக்களுக்கு கெடுதல் நினைத்தால் விஸ்வரூபம் எடுப்பேன்: விஜயகாந்த்


:""மக்களுக்கு கெடுதல் நினைத்தால், விஸ்வரூபம் எடுப்பேன்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க, விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் முகாமிட்டுள்ளார். 2வது நாளான நேற்று, வடபொன்பரப்பியில், காலை 9.45 மணிக்கு, பயணத்தை துவக்கி கிராமம், கிராமமாக சென்று நன்றி தெரிவித்தார்.புளியங்கோட்டையில், இரு ஆண் குழந்தைகளுக்கு ரமணா, முரசு என பெயர் வைத்து வாழ்த்தினார். கடுவனூரில் திரண்டிருந்த மக்கள்
மத்தியில் அவர் பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்து, 63 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அடிமைப்பட்டு கிடக்கும் பகுதியாக ரிஷிவந்தியம் தொகுதி இருக்கிறது. இதற்கு முன் இங்கிருந்த ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் ஏமாற்றியுள்ளனர்.சிவன் சொத்து குலநாசம் என்று கூறுவர். இனியும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்காதீர்கள். அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் என்று அந்த அதிகாரிகளை நான் நிச்சயம் கேள்வி கேட்பேன்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நல்லதே நடக்கும். என்னை தேர்ந்தெடுத்த உங்களுக்கு என்றும் நன்றி கடன் பட்டவனாகவே இருப்பேன். மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ரேஷன் கடை திறக்கப்படுவதாக புகார் உள்ளது. இனி அனைத்து நாட்களும் ரேஷன் கடை திறக்க முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்.அத்தியூரில் இருந்து, கடுவனூர் செல்லும் ஏரிக்கரை சாலை மிகமோசமாக உள்ளதை பார்த்தேன். இத்தனை நாட்கள் இங்குள்ள அதிகாரிகள் என்ன செய்தனர். மக்களுக்கு கெடுதல் செய்ய நினைத்தால், விஜயகாந்த் விஸ்வரூபம் எடுப்பான். எம்.எல்.ஏ., என்பவர் உங்கள் தேவைக்கு பயன்படவும், சேவை செய்வுமே உள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் உங்களுக்கு நிச்சயம் நல்லதை செய்வார்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

விஜயகாந்த் வருவதற்கு தாமதமானாலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காத்திருந்து அவரது பேச்சை கேட்டுவிட்டுச் சென்றனர். தொண்டர்கள் அணிவித்த சால்வைகளை அங்கிருந்த முதியோருக்கு விஜயகாந்த் சார்பில் வழங்கப்பட்டதால் முதியோர் முக மலர்ச்சி அடைந்தனர்.

"மாப்பிள்ளையை வெற்றி பெற செய்ததற்கு நன்றி' : நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மூங்கில்துறைப்பட்டில் விஜயகாந்த் பேசியபோது,"உங்க ஊர் மாப்பிள்ளை மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற செய்ததற்கு நன்றி. தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனைத்தையும் ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பேன்."மூங்கில் துறைப்பட்டு பெண்கள் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லை என்று எனக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, மாணவியர் சிரமம் இன்றி படிக்க போதிய வகுப்பறை கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பேன்."என்னால் அடிக்கடி இங்கு வரமுடியாவிட்டாலும் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் உங்கள் புகார்களை கொடுங்கள். அது உடனடியாக எனது பார்வைக்கு கொண்டு வரப்படும். அதன் மீது நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை பாதியில் முடிக்கிறார் விஜயகாந்த் : அவசர வேலை காரணமாக, நன்றி அறிவிப்பு சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு சென்னை செல்வதாக விஜயகாந்த் தெரிவித்தார்.ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட கலையநல்லூரில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் நேற்று மாலை 7 மணிக்கு விஜயகாந்த் பேசியதாவது:மக்களின் பிரச்னைகளை சரிசெய்ய முழு நேரமும் உழைக்க தயாராக இருக்கிறேன். மக்களுக்காகவே விஜயகாந்த் இருந்தான், வாழ்ந்தான் என்பதே எனக்கு போதும். வாகனத்தின் உள்ளே உட்கார்ந்து கொண்டு உங்களை பார்க்க வருவதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.முன்புறம் உட்கார்ந்து வந்தால் தான் செல்லும் இடங்களில் இருபுறமும் என்ன இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு வரமுடியும். இங்கு என்னநிலை என்று தெரிந்தால் தான் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.அவசர வேலை காரணமாக நாளை மதியமே எனது நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு சென்னை செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.விடுபட்ட ஊர்களுக்கு மீண்டும் நன்றி கூற வருவேன். ஓட்டு போட்டு என்னை வெற்றிபெற செய்த உங்கள் பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

No comments:

Post a Comment