Wednesday, December 28, 2011

'தானே' புயல் கரையைக் கடப்பது எங்கு?

 தானே புயல் குறித்த தொடர் எச்சரிக்கைகளால் மக்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. புயல் சரியாக எங்கு கரையைக் கடக்கும் என்பதில் இதுவரை தெளிவு இல்லை. இருப்பினும் கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், சென்னையை நோக்கியும் புயல் வரலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுவதால் இந்தப் பகுதிகளில் உள்ள கடலோர மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தானே புயலான சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி புயலானது நாளை பிற்பகல் வாக்கில் கடலூர் முதல் சென்னை வரையிலான பகுதிகளுக்கிடையே கரையைக் கடக்கக் கூடும். இந்த புயல் காரணமாக கடலூர் முதல் ஆந்திர மாநிலம் நெல்லூர் வரையிலான பகுதிகளிலும், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், புயல் கரையைக் கடக்கும்போது அது பலவீனமடைந்து விடும் வாய்ப்புகளும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

புயல்-'லேட்டஸ்ட்' எச்சரிக்கை:

இன்று காலை 7. 30 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லேட்டஸ்ட் புயல் தகவல்:

மிகத் தீவிர புயலான தானே, இன்று காலை 5.30 மணி நிலவரப்படி வங்கக் கடலில் தென்மேற்கில் நிலை கொண்டுள்ளது. அது மேலும் நகர்ந்து தற்போது மேற்கு தென் மேற்கில் நிலை கொண்டுள்ளது. சென்னையிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் புயல் தற்போது உள்ளது. 

இது மேற்கு வாக்கில் நகர்ந்து வட தமிழகக் கடற்கரையில், புதுச்சேரிக்கு அருகே நாகை மற்றும் சென்னை இடையே,30ம் தேதி காலையில் கரையைக் கடக்கக் கூடும்.

புயல் கரையை நெருங்கும்போது அது லேசாக பலவீனமடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானே புயல் மிகவும் தீவிர புயலாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் மக்களிடையே ஒருவிதமான பீதி காணப்படுகிறது. பல புயல்களை தமிழக கடலோர மக்கள் பார்த்துள்ள நிலையிலும் இந்த சீசனில் வந்துள்ள முதல் புயலே படு தீவிரமாக இருப்பதாக கூறப்படுவதால் மக்களிடையே ஒருவிதமான அச்ச நிலை காணப்படுகிறது.

கடந்த நான்கு நாட்களாகவே புயலின் நகர்வு குறித்து மக்கள் ஆர்வத்துடன் தகவல் அறிந்து வருகின்றனர். பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் தற்போது புயல் நெருங்கி விட்டதால் அது எந்த இடத்தில் சரியாக தாக்கும் என்பது தெரியாததால் பரபரப்பு காணப்படுகிறது.(thatstamil)

No comments:

Post a Comment