""பட்ஜெட் அறிக்கை தாக்கல் என்பது ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம் ஆகிவிட்டதே தவிர, மக்கள் சொந்த காலில், நிற்கும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை'' என பட்ஜெட் குறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மாநிலத்திற்கு கிடைக்கும் வருவாயை விட செலவு குறையும் என்றும்,
2,376 கோடி ரூபாய், மிச்சம் ஆகும் என்றும் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, கூடுதல் வருவாயை திரட்டுவதற்காக, 1,500 கோடி ரூபாய்க்கு மேல் ஏன் வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஏற்கனவே பால், பஸ் கட்டண உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு குறைந்தபட்சம் கட்டண சலுகையாவது அளித்திருக்கலாம்.சீரடைந்தது ஓரளவுக்குதானா: பஸ் கட்டணத்தை உயர்த்திய பிறகும், போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை ஒரளவுதான் சீரடைந்துள்ளது என்றும், மேலும் அரசின் உதவி இந்நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வால் எவ்வளவு வருவாய் கிடைத்தது என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. யானை வரும் முன்னே, மணியோசை வரும் என்பது போல் பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு மின் கட்டண உயர்வு வர இருக்கிறது. சொத்து வரியை சீரமைப்பதற்கு வாரியம், அமைக்கப்போவதாக அறிவித்துள்ளதால் சொத்து வரி உயரும் என்று எதிர்பார்க்கலாம்.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுகடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் கூடுதல் நிதி ஆதாரத்தோடு, இந்த ஆண்டும் தொடர்கிறது. ஒரு சில மக்கள் நலத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், அரசின் பட்ஜெட் அறிக்கை என்பது ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம் ஆகிவிட்டதே தவிர மக்கள் சொந்த காலில், நிற்கும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில், சரியான பொருளாதார கொள்கை பின்பற்றப்படவில்லை. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதையே இந்த பட்ஜெட் நினைவூட்டுகிறது.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment