Friday, July 20, 2012

விஜய் படத்துக்கு தொடரும் சிக்கல் - 'துப்பாக்கி' தலைப்புக்கு தடை நீட்டிப்பு


 ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்துக்கு சிக்கல் தொடர்கிறது. இந்தத் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், `கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் சினிமா படம் தயாரித்து வருகிறோம். படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்தோம்.
இந்த நிலையில், 'துப்பாக்கி' என்ற தலைப்பில் கலைப்புலி தாணு தயாரிக்கும் படத்தில் நடிகர்விஜய் நடிக்கிறார். கலைப்புலி தாணு விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த 'கள்ளத்துப்பாக்கி' என்ற தலைப்பின் பின் பகுதியான `துப்பாக்கி' என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். இந்த தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், `துப்பாக்கி'
என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்ககோரி, சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'தலைப்பின் பின்பகுதி அல்லது முன்பகுதியை பிறர் பயன்படுத்தக்கூடாது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. சிங்கம், ஈ, சிறுத்தை ஆகிய படங்கள் வெளியானது. அதே பெயருடன், சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன், நான் ஈ, நெருப்பு ஈ, சிறுத்தைபுலி என்ற படங்கள் வெளியாகியுள்ளது. மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
தடை நீட்டிப்பு
இந்த வழக்க நீதிபதி திருமகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களான தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி., தயாரிப்பாளர் கில்டு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர்.
இதையடுத்து நீதிபதி திருமகள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, வழக்கை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை வருகிற 25-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிடுகிறேன்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment