இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவிடம் எப்போதெல்லாம் தோற்கிறதோ அப்போதெல்லாம் இலங்கை கடற்படை ரவுடிகள், தமிழக மீனவர்களைத் தாக்குவதும், கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இது வேண்டும் என்றே நடக்கிறதா அல்லது தற்செயலானதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. வேண்டும் என்றே நடக்கும் சம்பவமாக இருந்தால் எதிர்காலத்தில்
மிகப் பெரிய அபாயத்தை இந்தியா சந்திக்க நேரிடும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இலங்கை அணி, இந்தியாவிடம் தோற்றபோது இரண்டு முறை தமிழக மீனவர்கள் கொடூரத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை தோற்றது. இதையடுத்து அன்று இரவு நான்கு தமிழக மீனவர்களை நடுக் கடலில் வைத்து கொடூரமாக சுட்டு கடலில் வீசியது இலங்கை கடற்படைக் காலிக் கும்பல்.
அதேபோல சனிக்கிழமை நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா, இலங்கையைத் தோற்கடித்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை 23 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை பிடித்துச் சென்று விட்டது. இதனால் தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்புக்குள்ளாகியுள்ளனர். இலங்கையுடன் கிரிக்கெட் உறவுகளை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால் இந்தியா வெல்லும்போதெல்லாம் தங்களது உயிருக்குத்தான் ஆபத்து ஏற்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
காலம் காலமாக இரு நாட்டு மீனவர்களுமே பாக் ஜலசந்திப் பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். இங்குதான் மீன்வளம் நன்றாக உள்ளதால், இலங்கை மீனவர்களும் இங்கு மீன் பிடிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.
கச்சத்தீவு நம்மிடம் இருந்தவரை எந்தப் பிரச்சினையும் எழுந்ததில்லை. ஆனால் 1974ம் ஆண்டு கச்சத்தீவை தூக்கி இந்திய அரசு, இலங்கையிடம் தாரை வார்த்த பின்னர் நிலைமை மோசமாகி விட்டது. நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இலங்கை தீவிரமாக இறங்கியது.
இந்திய மீனவர்களின் மீன்பிடி எல்லையானது சுருங்கிப் போனது. கச்சத்தீவு பகுதியில்தான் நிறைய மீன்வளம் உள்ளது என்பதால் நமது மீனவர்கள் அங்கு போகின்றனர். ஆனால் அங்கு போனாலே சுட்டுக் கொல்கிறார்கள் அல்லது அடித்து விரட்டுகிறார்கள் அல்லது சிறை பிடித்துச் செல்கிறார்கள். இத்தனைக்கும் கச்சத்தீவில் நமது மீனவர்கள் ஓய்வெடுக்க, ஒப்பந்தத்தில் வழி உள்ளது. ஆனால் அதை டாய்லெட் பேப்பர் போலத்தான் இலங்கை அரசு பாவித்து வருகிறது.
80களில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மிகுந்திருந்த நேரத்தில், இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதையே விட்டு விட்டனர். தமிழகத்தை ஒட்டிய இலங்கைக் கடற்பகுதி முழுவதுமே புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அப்போது தமிழக மீனவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஆனால் அதன் பிறகு நிலைமை மாறி விட்டது. இலங்கைக் கடற்படையிடம் சிக்கி இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிவரத் தகவல் ஒன்று கூறுகிறது. ஆனால் ஒரு முறை கூட இந்திய அரசு உறுதியான,விரைவான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்துக்குரிய விஷயமாகும்.
இந்த கொடூரத் தாக்குதலை நிறுத்த வேண்டும், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை, தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியபடிதான் உள்ளனர். ஆனால் மத்திய அரசோ அசைந்து கொடுப்பதாகவே தெரியவில்லை. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தற்போது தமிழக அரசியல் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ என பலரும் ஒரே குரலில் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதற்கும் மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை சீனா குறித்த பயத்தால்தான், இலங்கையிடம் தேவையில்லாமல் பணிந்து போவதாக கருதப்படுகிறது. எங்கே இலங்கை அரசைப் பகைத்துக் கொண்டால், சீனாவின் கை ஓங்கி விடுமோ, இலங்கையில் அது நிலை கொண்டு விடுமோ, நமது பாதுகாப்புக்கு ஆபத்தாகி விடுமோ என்று இந்திய அரசு பயப்படுகிறது. இதனால்தான் நமது நாட்டு குடிமக்கள் செத்தாலும் பரவாயில்லை, நமது நாட்டின் பரம விரோதியை, இலங்கையில் நிலை கொண்டு விட அனுமதிக்கக் கூடாது என்று இந்திய அரசு தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் சொந்த நாட்டு மக்களை சாகடித்து விட்டு வெறும் மண்ணை மட்டும் காத்து என்ன புண்ணியம் என்பதை மத்திய அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
இப்படி இந்திய அரசு பயந்து பயந்து செத்தாலும் கூட இலங்கை தன் வேலையில் தீவிரமாகவே உள்ளது. இந்தியாவை அது மதிப்பதில்லை. குறிப்பாக ஈழப் போரை இந்தியாவின் பேருதவியுடன் முடித்து விட்டதால் இப்போது அதற்கு இந்தியாவின் உதவி கூடத் தேவையில்லை. முன்பெல்லாம் இந்தியாவைப் பார்த்துப் பயந்து கொண்டிருந்த இலங்கை, இப்போது சீனா இருக்கும் தைரியத்தில் இந்தியாவை நோக்கி கால் மேல் கால் போட்டபடி தமிழக மீனவர்களை பந்தாடி வருகிறது.
இலங்கையிடம் இந்தியா எவ்வளவுதான் பணிந்து போனாலும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் குறைந்தபாடில்லை என்பதே உண்மை. பல முக்கியப் பணிகளை சீனாவுக்கே கொடுத்துள்ளது இலங்கை. ஆயுத ஒப்பந்தங்களையும் பெரிய அளவில் செய்துள்ளது. எவ்வளவு கடன் கேட்டாலும் கொடுக்கத் தயார் என்று சீனாவும் கூறி வருகிறது. இப்படி இந்தியாவின் தயவு சற்றும் தேவையில்லை என்ற நிலையில்தான் இலங்கை உள்ளது. ஆக, நாம் இலங்கையை குளிர்ச்சிப்படுத்தினால் அது சீனாவை அண்டாது என்ற வாதம் பொய்யானது, உப்புச் சப்பில்லாதது என்பது நிரூபணமாகியுள்ளது. அப்படி இருந்தும் ஏன் இந்தியா, இப்படி மொட்டைத்தனமாக நடந்து கொள்ள வேண்டும், அப்பாவித் தமிழக மீனவர்களின் உயிருடன் இலங்கை விளையாடுவதை ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது - பதில்தான் இல்லை.
ராமநாதபுரம், நாகப்பட்டனம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மீன்பிடி தொழில்தான் பிரதானமானது. அவர்களுக்கு அதை விட்டால் வேறு வேலை தெரியாது. அதிலும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மிகவும் பரிதாபமானவர்கள். அவர்களுக்கு வேறு வேலை எதுவுமே தெரியாது. அந்த மாவட்டத்திலும் வேறு வேலைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே அவர்கள் கடலை நம்பி மட்டுமே இருக்கவேண்டிய நிலை. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் மீன்பிடியை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. இவர்கள் குறித்து மத்திய அரசு மட்டுமல்லாமல், இதுவரை இருந்த தமிழக அரசுகளும் கூட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுத்ததில்லை. இறங்கி வர முயன்றதில்லை.
இவர்களின் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு தீவிரம் காட்டினால் மட்டுமே முடியும். மேலும் மாநில அரசும் சற்று தீவிர அக்கறை காட்ட வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும். நமக்காக ஓட்டு் போட்டவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்ற எண்ணம் கொஞ்சமாச்சும் அரசுகளின், பதவியில் உள்ளோரின் மனதில் உறைக்க வேண்டும். அப்படி உறைத்தாலே போதும் நிச்சயம் தீவிரமாக முயற்சியில் இறங்குவார்கள்.
அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள பாகிஸ்தானிடமே நாம் அவ்வளவு துணிகரமாக, துணிச்சலாக, தைரியமாக மோதும் போது, சுண்டைக்காய் நாடான இலங்கையைப் பார்த்துப் பயப்படுவது, அதை தாஜா செய்வது அவசியமே இல்லாதது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். சீனாதான் நமது பயம் என்றால், இப்போது இலங்கை நடந்து கொள்வது சீனாவை விட மோசமாக உள்ளதே என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
என்ன செய்வது, முன்பு பாகிஸ்தானை சமாளிக்க வங்கதேசத்தை உருவாக்கினார் இந்திரா காந்தி. ஆனால் இன்று இந்திரா காந்தியும் இல்லை, அவர் போன்ற தைரியமான, அரசியல் துணிச்சல் கொண்ட தலைவர்களும் இல்லை!(THANKS THATSTAMIL.COM0
அடப்பாவிகளா... விளையாட்டையும் செய்யும் கொடூரத்தையும் சம்பந்தப்படுத்தலாமா?
ReplyDelete