Monday, August 6, 2012

கோரிக்கை வைத்த சிம்பன்சி!


 இங்கிலாந்தில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் அடைக்கப்பட்டிருந்த சிம்பன்சி, தன்னை வேடிக்கை பார்க்க வந்தவரிடம், இந்தக் கேட்டைத் திறந்து விடுங்கள் என்று 'சைன் பாஷையில்' பேசியது அனைவரையும் வியக்க வைத்தது. அதை விட ஆச்சரியமாக, அந்தக் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்பதையும் சிம்பன்சி சொல்லிக் கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதனுக்கு மட்டும்தான் ஆறறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்
ஐந்தறிவு படைத்த விலங்குகள் கூட சில நேரங்களில் நம்மை மிஞ்சி விடுகின்றன தங்களது அறிவுப்பூர்வமான செயல்பாடுகளால். அப்படி ஒரு சம்பவம், இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸில் உள்ள வெல்ஷ் இயற்கை விலங்கியல் பூங்காவில் நடந்துள்ளது.
அங்குள்ள ஒரு பகுதியில் சிம்பன்சிகள் இருந்தன. அதைப் பார்வையாளர்கள் பலர் வேடிக்கைப் பார்த்துச் சென்றனர். அப்போது ஒரு சிம்பன்சி மட்டும் பார்வையாளர்களை நோக்கி நடந்து வந்தது. பின்னர் கண்ணாடித் தடுப்புக்கு அருகில் நின்றபடி சைன் பாஷையால் ஒரு பார்வையாளருடன் பேசத் தொடங்கியது.
அதைப் பார்த்த அந்தப் பார்வையாளர் அது என்ன சொல்கிறது என்று கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அந்த சிம்பன்சி, தனது இரு கைகளையும் கோர்த்து பார்வையாளரை நோக்கி காட்டியது. அதாவது அமெரிக்க சைன் பாஷையில் அப்படி கைகளை கோர்த்துக் காட்டினால், கேட் அதாவது கதவு என்று அர்த்தம்.
பின்னர் கைகளை விடுவித்த சிம்பன்சி, கண்ணாடிக் கதவைத் தட்டி மறுபக்கம் உள்ள கதவின் தாழ்ப்பாளை விரலால் சுட்டிக் காட்டி திறந்து விடுமாறு சைன் பாஷை மூலம் அந்த நபருக்கு கோரிக்கை வைத்தது. இதைப் பார்த்து அந்த நபர் சிரித்தார். அப்போது பக்கத்தில் இருந்த ஒருவர் சிம்பன்சியைப் பார்த்து கேலி செய்வது போல அவரும் சைன் பாஷையில் செய்து காட்டினார்.
இதையடுத்து சற்று சீரியஸான சிம்பன்சி, நான் சொல்வது உனக்குப் புரியலையா என்று கேட்பது போல அந்த நபரிடம் மீண்டும் கேட் தாழ்ப்பாளை திறந்து விடு, நான் வெளியே போக வேண்டும் என்று மறுபடியும் பொறுமையாக செய்து காட்டியது. அத்தோடு நில்லாமல், தனது உள்ளங்கையில் ஒரு விரலால் சுட்டிக் காட்டியபடியும் அது அந்த நபருக்குத் தான் சொல்ல நினைப்பதை செய்து காட்டியது.
இந்த காட்சிகளின் வீடியோ பதிவு வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதேபோல அந்தப் பக்கமாக வருபவர்களிடம் எல்லாம் கெஞ்சாத குறையாக அந்த சிம்பன்சி செய்து காட்டிக் கொண்டிருந்தது.
48 விநாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ காட்சி நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது. ஒரு சிம்பன்சி சைன் லாங்குவேஜில் பேசுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே வாஷோ என்ற பெண் சிம்பன்சி, சைன் லாங்குவேஜை அழகாகக் கற்றுக் கொண்டு பேசியது. இதுதான் சைன் லாங்குவேஜை கற்ற முதல் விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பன்சியும் இந்த பூங்காவில் இருந்ததுதான். 2007ம் ஆண்டு அது இறந்து விட்டது. மொத்தம் 350 வார்த்தைகளை அது கற்றிருந்தது. அத்தோடு நில்லாமல் தனது வளர்ப்பு மகன் லூலிஸுக்கும் அது கற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பிற சிம்பன்சிகளுக்கும் இதுபோல சைன் லாங்குவேஜ் கற்றுத் தரப்பட்டுள்ளது.
சிம்பன்சிகளுக்கும், மனிதர்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. மனிதனின் நெருங்கிய உறவுதான் சிம்பன்சி. சிம்பன்சிகள் குரங்குகள் அல்ல. பார்க்க குரங்கு போல இருக்கும். ஆனால் ஏப் குடும்பத்தைச் சேர்ந்தவை சிம்பன்சிகள். நாமும் இதே வகையறாதான். ஏப் குடும்பத்தைச் சேர்ந்த பிற விலங்கினங்கள் உராங்குட்டான் மற்றும் கொரில்லா ஆகியவை.(source:thatstamil.com)

No comments:

Post a Comment