Wednesday, August 22, 2012

இப்போதைக்கு திருமணம் இல்லை! நம்புங்க ப்ளீஸ்

மாடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு டைரக்டர் ப்ரியதர்ஷன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. கமல், விக்ரம், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என்று கிட்டத்தட்ட அத்தனை பெரிய நட்சத்திரங்களோடு ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நாகர்ஜூனா, வெங்கடேஷ், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., என்று அங்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். அதன்பிறகு புதுமுகங்களின் வரவால் த்ரிஷாவுக்கு கொஞ்சம் சினிமாவில் சறுக்கல் இருந்தாலும், வருஷத்துக்கு மூன்று-நான்கு படங்கள் ‌கொடுத்து கொண்டு தான் இருக்கிறார். 

பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப்பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. 

இதுபற்றி த்ரிஷாவிடம் நாம் நேரடியாக கேட்டபோது, அவர் கூறியதாவது, என் கல்யாணம் பற்றிய செய்திகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் வருகிறது. இப்போதைக்கு நான் படங்களில் தான் பிஸியாக இருக்கிறேன். ராணாவுக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கு. ஆனால் அது கல்யாணம் வரைக்கும் போகுமா...? என்பது எனக்கு தெரியல, பழகி பார்க்கணும். சினிமாவுக்கு வந்து 10 வருடம் ஆகிறது. பல மொழிகளிலும் நடிச்சாச்சு, நிறைய கமர்ஷியல் படங்களிலும் நடிச்சாச்சு. இப்பதான் த்ரிஷா எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பாங்க என்று நம்புறாங்க. இதனால் எனக்கு நல்ல நல்ல ரோல் கிடைக்குது. ரொம்பவே என்ஜாய் பண்ணி படங்களில் நடிக்கிறேன். 

எதையும் மூடி மறைத்து பேசுறவ நான் கிடையாது. அது என்னோடு பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்க என் கல்யாண விஷயத்தை நான் ஏன் மறைக்க போறேன். இப்போ விஷால் கூட சமர், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, ஜெயம் ரவியுடன் பூலோகம் போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இதுதவிர இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேசிக்கிட்டு இருக்கேன். எனக்கு ராணா புதிய நபர் கிடையாது. ஏற்கனவே அவரது அப்பா சுரேஷ் சாரின் தயாரிப்பில் வெங்‌கடேஷ் கூட நமோ வெங்கடேசா, ஆடலாரி, பாடிகார்ட் போன்ற படங்களில் நடிச்சுருக்கேன். அவர் தயாரிப்பில் நான் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். ராமநாயுடுவின் ‌பேரன் தான் ராணா. நடிகர் வெங்கடேஷ், ராணாவுக்கு சித்தப்பா முறை. அவங்க குடும்பம் எல்லோருடனும் நான் நன்றாக பழகி இருக்கேன். 

ராணா எனக்கு நல்ல நண்பர். அவருடன் கொஞ்சம் பழகி பார்க்கணும். கல்யாணம் என்பது காலம் முழுக்க வாழ்க்கை நடத்தும் விஷயம். அது விளையாட்டு கிடையாது. ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். என்னுடைய கல்யாணம் இப்போதைக்கு இல்ல, என்ன நம்புங்க ப்ளீஸ் என்றார்.

த்ரிஷா பேசி முடித்ததும், அவரது திருமணம் பற்றி அப்படியே அம்மா உமா கிருஷ்ணனிடம் கேட்டோம். அவர் சொன்னபோது, சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு த்ரிஷாவும், ராணாவும் சேர்ந்து ஒரு போட்டோ ஷூட் கொடுத்தாங்க. அந்தபடங்களை பார்த்ததும் இருவருக்கும் விரைவில் கல்யாணம் என்று செய்தி வந்துவிட்டது. திருமண விஷயத்தில் த்ரிஷாவுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம். அவ தப்பா எந்த முடிவும் எடுக்கமாட்டாள். எது செய்தாலும் அது சரியா இருக்கும். எங்களுக்கு ஜாதி, மதம் எல்லாம் முக்கியம் கிடையாது. த்ரிஷா யாரை பிடிக்கிறது என்று சொல்கிறாளோ அவரை அவளுக்கு கல்யாணம் பண்ணி வைப்போம். நிச்சயம் அவள், வாழ்க்கை விஷயத்தில் அவசரப்படாமல் சரியான முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.

‌கேமரா முன்னாடி நிற்பது த்ரிஷாவுக்கு ரொம்ப பிடிக்கும். அவளா விரும்பி படத்தில் நடிக்கிறாள். இப்போது த்ரிஷா நடித்து வரும் படங்களின் ஷூட்டிங் பாதிக்க கூடாது என்று நினைக்கிறோம். கையில் இருக்கும் படங்களை முடிக்கட்டும் அவளுக்கு யார்னு அவளே முடிவு பண்ணட்டும், நானே முதல்ல மீடியாவுக்கு கூப்பிட்டு சொல்றேன். அதுவரை கொஞ்சம் அவசரப்பட்டு எதையும் எழுதாதிங்க என்று ரொம்பவே கெஞ்சி கேட்டு கொண்டார் த்ரிஷா அம்மா. 

கல்யாண விஷயத்தில் ஆரம்பத்தில் நடிகர்-நடிகைகள் உண்மையை மறைப்பதும், பின்னர் இறுதியாக கல்யாண பத்திரிகையோடு பத்திரிகையாளர்களை சந்திப்பதும் சகஜம் தான். ஆனால், த்ரிஷா விஷயத்தில் எப்படியோ...? பொறுத்திருந்து பார்ப்போம்.
Source:http://cinema.dinamalar.com/tamil-news/8223/cinema/Kollywood/Trisha-spoke-about-her-marriage.htm

No comments:

Post a Comment