Wednesday, August 15, 2012

நமது கொடியின் கதை....


சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் நாளில், கொடியின் தோற்றத்தை தெரிந்துக் கொள்வது, நம் கடமை.

சச்சிந்திரநாத் போசும், சில நண்பர்களும் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில், கொடி அமைத்தனர். மஞ்சள் பகுதியில், தேவநாகரியில் எழுதப்பட்ட வந்தே மாதரமும், கீழே இருந்த பச்சை நிறத்தில் இந்து, முஸ்லிம் மதங்களின் சின்னங்களாக சூரியனும், சந்திரனும் இடம் பெற்றிருந்தன. ஏழு தாமரைப் பூக்களையும் கொடியில் அமைத்தனர். ஆகஸ்ட் 7, 1906ல், "பகிஷ்கார தினமாக'க் கொண்டாடப்பட்ட போது, கோல்கட்டாவில் உள்ள கிரீன் பார்க்கில் ,முதன்முறையாக இந்தக் கொடி ஏற்பட்டது.ஆகஸ்ட் 7, 1907ல், ஜெர்மனியிலுள்ள ஸ்டட்கார்ட்டில், 2வது சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸ் மாநாடு நடந்தநது. இதில், இந்தியப் புரட்சியாளர் மேடம் பிகாஜி ருஸ்டம் காமா, இந்திய தேசியத்தின் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்தார்.


ஹோம் ரூம்ல் இயக்கம் துவங்கியதும், அன்னிபெசன்ட் அம்மையார், புதிய கொடி ஒன்றை உருவாக்கினார்.அதில், ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும், அடுத்தடுத்து இடம் பெற்றிருந்தன. அவற்றின் மேல், ஏழு நட்சத்திரங்கள் சப்தரிஷியைப் போல் அச்சிடப்பட்டிருந்தன. இடது மேல் மூலையில் யூனியன் ஜாக்; இன்னொரு மூலையில் வெள்ளைப் பிறையும், நட்சத்திரமும் இருந்தன. பின், 1921ல், பி. வெங்கையா என்பவர், ராட்டையைச் சிவப்பு, பச்சை வண்ணத்தில் இடம்பெறச் செய்த ஒரு கொடி தயாரித்தார். இதில், வெள்ளை நிறத்தை சேர்க்க, காந்திஜி விரும்பினார். ஜனவரி, 26ம் தேதியைச் சுதந்திரத் தினமாகக் கொண்டாடும் படி, காந்திஜி அறிவித்தார். ஜனவரி 26, 1930ல், காஷ்மீர் முதல், கன்னியாகுமரி வரை உள்ள மக்கள், பொது இடத்தில் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திர சபதம் எடுத்துக் கொண்டனர்.

கொடி வளர்ச்சியில், 1931ம் ஆண்டு மிக முக்கிய காலகட்டம். இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, பட்டாபி சீதாராமையாவின் தலைமையிலான தேசியக் கொடிக் குழுவின் அறிக்கையை ஆராய்ந்தது. கொடி முழுவதும் வெளிர் மஞ்சள் வண்ணத்தில், மேலே இடதுபுறத்தில் ராட்டை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கமிட்டி நிராகரித்தது. சில மாறுதலை ஏற்றுக் கொள்ளுமாறு, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கு சிபாரிசு செய்தது. தேசியக் கொடி குழுவின் அறிக்கையை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ந்து, அறிக்கையை ஏற்றுக் கொண்டது. டிசம்பர் 1929, ஆகஸ்ட் 9ம் நாள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து, இந்தியாவின் விடுதலைக்காக, நம் சரித்திரத்திலேயே ஈடு இணையற்ற ஓர் இயக்கம் துவங்கியது. ஆதலால்,
ஆகஸ்ட் 9, கொடியேற்றப்படும் புனித நாள்களுள் ஒன்றானது!

ஜூலை 22, 1947அன்று, இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையில், மூவண்ணக்கொடியைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை அறிமுகம் செய்து, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உரையாற்றும் போது கூறியதாவது:இந்தியாவின் தேசியக் கொடி, கேசரி வண்ணம், வெள்ளை, கரும்பச்சை ஆகிய வண்ணங்களை ஒன்றன்கீழ் ஒன்றாகச் சம அளவில் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளை நிறத்தின் மத்தியில், நமது ராட்டையை நினைவு கூறும் வகையில், வெளிர் நீல நிறத்தில், சக்கரம் ஒன்று இடம் பெற்றிருக்கும். அசோகரின் சாரநாத் சிங்க உருவத்தில் இடம்பெற்றிருக்கும் சக்கரத்தின் வடிவத்திலேயே இந்தச் சக்கரமும் இருக்கும். இந்தக் சக்கரத்தின் விட்டம், கிட்டத்தட்ட வெள்ளை நிறப் பட்டையின் உயரத்திற்கு இணையானதாக இருக்கும். தேசியக் கொடியின் அகலமும், நீளமும் (உயரமும்) முறையே, 2:3 என்ற விகிதத்தில் இருக்கும்.

சில நேரங்களில், கட்டடத்தின் மீது தேசியக் கொடியைப் பறக்கவிடும் போது, 2:1 என்பது சரியான அளவாக இருக்கலாம். எனவே, கொடியின் நீளம், அகலம் தொடர்பான விகிதாச்சாரம் முக்கியமல்ல. அதன் வடிவமைப்பு தான் முக்கியம்.ஏறத்தாழ, 60 ஆண்டுகளுக்கு மேலாகக் காந்தியடிகளின் தலைமையில், எந்த மூவண்ணக்கொடியின் கீழ் போராட்டம் நடைபெற்றதோ, அதே கொடி தான், சில மாறுதலுடன் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.ஆகஸ்ட், 14, 1947 அன்று, நடுநிசியில், 12 மணி அடித்ததும், ஆகஸ்ட், 15 பிறந்ததும், முறைப்படி சுதந்திர இந்தியாவும் பிறந்தது! அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
(ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு)
Source:http://www.dinamalar.com/News_detail.asp?Id=529447

2 comments:

 1. பகிர்வுக்கு நன்றி...

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நமது தேசியக் கொடியின் வரலாறை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்
  நன்றி..
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete