Tuesday, September 4, 2012

டாஸ்மாக் கடைகளை மாலை நேரத்தில் மட்டுமே திறக்க அரசு தீவிர யோசனை


 தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடாமல் மாலை நேர கடையாக செயல்படுத்தினால் என்ன என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 7,434 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.15,000 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது என்று கூறப்படுகின்றது. டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி அதனுடன் இணைந்து செயல்படும் பார்கள், லைசென்ஸ் பெற்ற மதுபான பார்கள் மூலமும் பெருத்த வருமானம் கிடைக்கின்றதாம்.

மதுக்கடைகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதால், பல்லாயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொய்வு இன்றி அரசு நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூடிவிடலாம் என்ற மனநிலையில் முதல்வர் ஜெயலலிதா இருப்பதாக தகவல் வெளியானது.
அதுவும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு அரசு மூடுவிழா நடத்தப் போவதாக காட்டுத்தீ போல பரபரப்பான தகவல் பரவியது. இந்த தகவலை கேட்டு குடிமகன்கள் பெருத்த கவலை அடைந்தனர்.
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் அந்த வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைக்காமல் போகும். அதற்கு மாற்று வழியாக என்னென்ன திட்டத்தை செயல்படுத்தலாம் என அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூடிவிடாமல் மாலை நேரக் கடைகளாக மாற்றினால் என்ன என்ற ரூபத்தில் ஆலோசனை நடந்து வருகின்றதாம்.
கேரள உயர் நீதிமன்றத்தில் மதுக்கடைகள் குறித்த வழக்கில், மாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை நடத்த பொதுநல வழக்கு தொடரப்பட்டதாம். இந்த மனு குறித்த ஆலோசனைக்கு மாநில அரசின் பதில் என்ன என்று நீதிமன்றம் கேரள அரசை கேட்டுள்ளது. இதையே முன்வைத்து மாலை 5 மணி முதல் இரவு 10 மணி அல்லது 11 மணி வரை டாஸ்மாக் கடைகளை நடத்தலாமா என யோசனை ஓடிக்கொண்டு உள்ளதாம். ஆக விரைவில் டாஸ்மாக் கடைகள் குறித்து ஒரு தெளிவான முடிவை தமிழக அரசு எடுக்க உள்ளதாம்.
ஏற்கனவே, மது மயகத்தில் உள்ள குடிமகன்களுக்கு இந்த தகவலை கேட்டு மேலும் போதை தலைக்கு ஏறிவிட்டதாம்.

No comments:

Post a Comment