Tuesday, November 27, 2012

தியேட்டரில் ரகளை செய்த நடிகை புவனேஸ்வரி


 சென்னை அருகே டிரைவ் இன் தியேட்டருக்கு வந்த கவர்ச்சி நடிகையும், விபச்சாரத்தில் ஈடுபட்டதாக முன்பு கைது செய்யப்பட்டவருமான புவனேஸ்வரியும், அவரது ஆட்களும் பெரும் ரகளையில் ஈடுபட்டு தியேட்டரை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கைத் தொடர்ந்து தப்பி ஓட முயன்ற புவனேஸ்வரியை போலீஸார் ஆம்பூர் அருகே கைது செய்துள்ளனர்.
விபச்சாரம் செய்ததாக கையும் களவுமாக பிடிபட்டவர் புவனேஸ்வரி. இவரது விவகாரத்தால் பத்திரிக்கையாளர்களுக்கும் திரையுலகினருக்கும் கூட பெரும் பிரச்சினை வெடித்தது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கூட கூட்டம் போட்டுப் பேசி வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே இதுபோல செய்கிறார்கள் என்றெல்லாம் நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார்கள்.
இந்த நிலையில் நடிகை புவனேஸ்வரி ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு டிரைவ் இன் ஹோட்டலுக்கு தாமோதரன் என்பவர் உள்ளிட்ட ஆட்களுடன் துப்பாக்கி படம் பார்க்க வந்தார். அப்போது தியேட்டர் வளாகத்திற்குள் நுழைய காரை ஓட்டி வந்த புவனேஸ்வரியின் டிரைவர், தனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த கார் மீது இடித்து விட்டார்.
இதையடுத்து அந்தக் காரை ஓட்டி வந்த தாம்பரத்தைச் சேர்ந்த குமார் கீழே இறங்கி வந்து புவனேஸ்வரியின் கார் டிரைவரை இதுகுறித்துத் தட்டிக் கேட்டார். இதனால் கோபமடைந்த, புவனேஸ்வரிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தாமோதரன் வேகமாக வந்து குமாரை அடித்து உதைத்தார். மேலும் புவனேஸ்வரியும் காரை விட்டு இறங்கி வந்து குமாரிடம் வாக்குவாதம் செய்தார்.
இதைப் பார்த்த தியேட்டர் ஊழியர் செல்வராஜ் என்பவர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரையும போட்டு உதைத்தது புவனேஸ்வரி கும்பல். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஜீப் டிரைவர் பாஸ்கர் ஆகியோர் விரைந்து வந்து தகராறு செய்த நடிகை புவனேஸ்வரியையும், அவருடன் வந்தவரையும் கண்டித்தனர்.
அப்போது எங்கிருந்தோ ஒரு மர்மக் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் புவனேஸ்வரியின் ஆட்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் போலீஸாரைத் தாக்கினர். தியேட்டருக்குள் புகுந்து தியேட்டரையும் அடித்து சூறையாடினர்.
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து புவனேஸ்வரியும் அவருடன் வந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
போலீஸார், பொதுமக்கள், தியேட்டர் ஊழியர் என சகலரையும் தாக்கிய புவனேஸ்வரி மற்றும் அவரது கும்பல் மீது கொலை முயற்சி, பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்.
இதையடுத்து புவனேஸ்வரியைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். இந்தநிலையில், பெங்களூர் செல்லும் வழியில் ஆம்பூரில் வைத்து சிக்கியுள்ளார் புவனேஸ்வரி. அவரை வாகன சோதனையின்போது மடக்கிப் பிடித்த ஆம்பூர் போலீஸார் உடனடியாக சென்னைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆம்பூர் விரைந்த சென்னை போலீஸ் படையினர் புவனேஸ்வரியை தங்களது கஸ்டடியில் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னைக்குக் கொண்டு வரப்படும் புவனேஸ்வரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment