Tuesday, October 26, 2010

மொபைல் போன் நம்பரை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றும் வசதி: நவம்பரில் அறிமுகம்

மொபைல் போன் வாடிக்கையாளர்கள், தங்களின் எண்களை மாற்றாமலே, மொபைல் போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, நாட்டிலேயே முதலாவதாக அரியானா மாநிலத்தில், அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது மொபைல் போன் சேவை அளித்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும், தங்களுக்கென பிரத்யேகமாக துவங்கும் எண்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள், தற்போது பயன்படுத்தி வரும் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு பதிலாக, வேறொரு புதிய நிறுவனத்துக்கு மாற விரும்பினால், அவர் பயன்படுத்தி வரும் எண்ணையும் மாற்ற வேண்டி வரும். இதனால், வாடிக்கையாளர்களின் தகவல் பரிமாற்றத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்னையை தவிர்க்க, 'மொபைல் நம்பர் போர்டபிலிட்டி' (எம்.என்.பி.,) என்ற திட்டத்தை செயல்படுத்த, மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் திட்டமிட்டது. இதன்படி வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்துக்கேற்ப தொலைத்தொடர்பு நிறுவனங்களை தேர்வு செய்யலாம். அதற்காக எண்களை மாற்றிக் கொள்ள தேவையில்லை. தொடர்ந்து அதே எண்ணை பயன்படுத்தலாம். கடந்தாண்டே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இருந்தாலும், தகவல் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள், தங்களின் நெட்ஒர்க்கை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தியதாலும், கட்டமைப்பு பணிகளுக்காகவும், திட்டத்தை செயல்படுத்துவது தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது இத்திட்டத்தை, அடுத்த மாதம் முதல் படிப்படியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா கூறுகையில்,'எம்.என்.பி., திட்டத்தை அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து, படிப்படியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக, அடுத்த மாதம் முதல் தேதி, அரியானா மாநிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என்றார்

No comments:

Post a Comment