Tuesday, October 19, 2010

சச்சினுக்கு இங்கிலாந்து வீரர் ஸ்மித் புகழாரம்


 எதிர்பார்ப்புகளை வெற்றியாக மாற்றுவதில் சச்சின் வல்லவர் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் எட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 மேலும், சச்சினிடமிருந்து, இங்கிலாந்து கால்பந்து வீரர் வெய்ன் ரூனி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 ஸ்மித் இப்போது பத்திரிகைகளில் விளையாட்டுத் தொடர்பான கட்டுரைகளை எழுதி வருகிறார். பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றில் இது குறித்து அவர் எழுதியுள்ளதாவது:
 சச்சின் டெண்டுல்கர், வெய்ன் ரூனி ஆகியோர் தத்தமது துறைகளில் சிறப்பான வீரர்கள். இவரும் சாதிக்கப் பிறந்தவர்கள். விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றளவும் அனைவராலும் மதிக்கப்படும் வீரராக திகழ்கிறார் சச்சின்.
 எந்தவொரு சர்ச்சையோ, குற்றச்சாட்டோ அவரது புகழை பாதித்ததில்லை. விளையாட்டில் நேர்மை, பொறுமை, எளிமை ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.
 ரூனியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் ரூனியின் அண்மைக்கால செயல்பாடுகள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் உள்ளன.
 கிரிக்கெட் வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்களை சச்சின் சந்தித்திருக்கலாம். ஆனால், அவை அனைத்துக்கும் தனது பேட்டிங்கால் மட்டுமே அவர் பதில் சொல்லியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
 எனினும், வழக்கம்போல் தனது அடுத்த சாதனை பயணத்துக்கு தன்னை தயார்படுத்தத் தொடங்கிவிட்டார்.
 இதை ரூனியும் கற்றுக்கொள்ள வேண்டும். தன் மீதான விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் தனது விளையாட்டின் மூலம் ரூனி பதில் சொல்ல வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அவர் இழக்கப்போவது ரசிகர்களை மட்டுமல்ல, அவரது கால்பந்து திறனையும்தான் என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்மித்.

No comments:

Post a Comment