தலையங்கம்: தேவை, நம்பகத்தன்மை...!
First Published : 06 Oct 2010 12:41:27 AM IST
Last Updated : 06 Oct 2010 02:55:58 AM IST
தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பணபலம், அடியாள்பலம் ஆகியவற்றை எப்படி ஒழிப்பது என்பதுபற்றி விவாதிக்கப்பட்டபோது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்க ஏதேனும் ஒரு நடவடிக்கை தேவை என்ற கருத்தைப் பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழு நம்பிக்கைக்கு உரியவை அல்ல என்பதாக அமெரிக்க கணினி வல்லுநர்கள் சிலர் கருத்துத் தெரிவித்த பிறகு, இந்தியாவில் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த ஐயப்பாடுகளும், அது தொடர்பான கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முற்றிலும் தவிர்த்துவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவது என்பது இயலாத காரியம். ஆனால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசனை மின்னணு இயந்திரத்தின் மீது நம்பிக்கை கொள்ளவைக்கச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அந்த ஆலோசனை என்னவென்றால், ஒரு வாக்காளர், தான் தேர்வு செய்த வேட்பாளருக்கு அருகில் இருக்கும் பொத்தானை அழுத்தும்போது, அந்தச் சின்னத்துக்குத்தான் வாக்கு அளிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ரசீது கிடைக்கச் செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த யோசனை நடைமுறைக்கு சாத்தியமானது. இன்றைய நவீன உலகில் சாதாரண பேருந்துக் கட்டணச் சீட்டுகூட கணினியிலிருந்து கிடைக்கும்போது, சாதாரண காபி, டீ டோக்கன்கூட கணினியிலிருந்து கிடைக்கும் இன்றைய நாளில், ஒரு வாக்காளர் தான் அளித்த வாக்குக்கான ரசீது பெறுவது என்பது கணினியுடன் இணைந்த தொழில்நுட்பம். இதற்கு ஒரு சிறிய பிரிண்டர் கருவி போதுமானது. சுமார் 3 செ.மீ. நீள அகலம் உள்ள ஒரு ரசீது கிடைக்கச் செய்வதன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரும் செலவு நேர்ந்துவிடப் போவதில்லை.
வாக்காளர் நம்பிக்கை பெறுவதற்காக, அவர் அழுத்தும் வேட்பாளர் சின்னம் விவரம்தாங்கிய ரசீது கிடைத்தாலும், அதன் மென்பொருளில் உள்நோக்கத்துடன் மாற்றம் செய்து, வேறுநபருக்கு வாக்குக் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டால் இந்த ரசீது கிடைத்து என்ன லாபம் என்று கேட்கலாம். ஆனால் இந்த ரசீதை வாக்காளர் வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்காமல், இதையும் ஓர் ஆவணமாக ஒரு பெட்டியில், வாக்குச்சாவடி அதிகாரி முன்பாக, வாக்குச்சீட்டைப் போல போட்டுவிட்டுச் செல்லும் நடைமுறையையும் உருவாக்குவதன் மூலம் இந்த சந்தேகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
மின்னணு வாக்குப்பதிவில் சந்தேகம் இருப்பதாக யாரேனும் புகார் எழுப்பினால், இந்த ரசீதுகளையும் எண்ணிப் பார்க்கும் பணியை மேற்கொள்ளலாம். எண்ணிக்கை மாறுபாடு இல்லை என்பது உறுதியாகும்போது, ரசீதுகள் எண்ணுவதற்காக அரசுக்கு ஏற்படும் முழுச் செலவையும் அந்த சந்தேக வேட்பாளர் முன்னதாகவே செலுத்தியாக வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம். இந்த ரசீது எண்ணிக்கைக்கான கட்டணம் மிக அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இதை யாரும் விளையாட்டாகப் பயன்படுத்த முன்வரமாட்டார்கள்.
இதில் உள்ள ஒரே ஒரு சிக்கல், இத்தகைய ரசீதுகளின் மை விரைவில் அழிந்துவிடும் என்பதுதான். ஒருவேளை, தேர்தல் வாக்குப்பதிவுக்காக மட்டும் பிரத்யேக மை பயன்படுத்தச் செய்யலாம். அல்லது ரசீதுகளின் எண்ணிக்கைக்கு ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யலாம்.
வாக்காளருக்கு நம்பிக்கை ஏற்படுத்த இத்தகைய நடைமுறை உதவும் என்றாலும், பணபலம் மற்றும் அடியாள் பலத்தை வைத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதில், தேர்தல் ஆணையத்துக்கு சரியான ஆலோசனைகள் ஏதும் வழங்கப்படவில்லை.
பத்திரிகைகளில் விளம்பரம் வந்தால் அந்தக் கட்டணங்கள் வேட்பாளர் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுகிறது என்ற காரணத்தால்தான், அதற்கான பணத்தை பத்திரிகைகளுக்குக் கொடுத்துவிட்டு, அதே அளவில் தன் பிரசாரத்தைச் செய்தியாக வெளியிட்டுக் கொள்ளும் போக்கு அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. இதற்குச் சில பத்திரிகைகள் விலைபோக முற்பட்டுள்ளன என்பது வேதனையான விஷயம். ஆனால் பத்திரிகையில் புகழ்ந்து எழுதுவதால் மட்டுமே எந்தவொரு வேட்பாளரும் இவர்கள் வெற்றியும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
பத்திரிகைகளில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதற்காக இவ்வளவு அங்கலாய்க்கும் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தார்கள், இலவசமாக பிரியாணி விருந்து வைத்தார்கள், வேட்டி சேலை வழங்கினார்கள், லட்டுக்குள் மோதிரம் கொடுத்தார்கள், செல்போன் கொடுத்தார்கள் என்று எழுதியதை மட்டும் ஏன் பார்த்தும் பார்க்காமல் கண்மூடி மௌனம் சாதிக்கிறது என்பது புரியவில்லை.
திருமங்கலம், திருச்செந்தூர், பென்னாகரம் இடைத்தேர்தலில் சாலைவிபத்தில் லாரி கவிழ்ந்து இலவச வேட்டி சேலைகள் சிதறிக்கிடந்ததையும், இலவச டிவிக்கள் விழாக்கள் இல்லாமல் வழங்கப்பட்டதையும், வாக்குக்கு 500, 1,000 என பட்டுவாடா நடப்பதையும், ஓட்டல்களில் புகுந்து அதிரடி சோதனை நடத்தி கட்டுக்கட்டாக விநியோகத்துக்கு வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டதையும் வெளியிட்டது பத்திரிகைகள்தானே!
திருமங்கலம் பார்முலா, பென்னாகரம் பார்முலா எங்களிடம் இருக்கிறது என்று அரசியல்வாதிகளே மேடையில் பேசுகிறபோதும்கூட, ஒரே ஒருநபர்மீது கூட நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு தேர்தல் முடிந்தவுடனும், எல்லா புகார்களையும் மூட்டைகட்டி வைத்துவிடும் தேர்தல் ஆணையத்தைப் பற்றி யாரிடம் போய்க் குறைசொல்வது? தேர்தல் ஆணையம் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தானே தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்?
அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, தேர்தல்கள் நடத்தப்படும் விதத்தின்மீதும், ஏன், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீதும்கூட மக்கள் மத்தியில் அவநம்பிக்கை தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின்மீது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் விபரீதத்துக்குத் தேர்தல்களே வழிகோல நேரிடும் என்று எச்சரிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி-தினமணி
No comments:
Post a Comment